ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸூம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளும் மோதும் இந்தப் போட்டியின் டாஸை சன்ரைசர்ஸ் அணி வென்றிருக்கிறது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் டாஸை வென்றிருந்தார். முதலில் பேட் செய்யப்போவதாகவும் அறிவித்தார்.
இதே சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியிலும் சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட் செய்தே ராஜஸ்தான் அணியை வீழ்த்தியிருந்தது. டாஸில் இரண்டு அணிகளின் கேப்டன்களும் பேசியவை இங்கே.
டாஸை வென்ற பேட் கம்மின்ஸ் பேசுகையில், ‘நாங்கள் முதலில் பேட் செய்யப்போகிறோம். பிட்ச்சைப் பற்றி பெரிதாகத் தெரியவில்லை. கடந்த போட்டியில் பிட்ச் நன்றாக இருந்தது. கடந்த போட்டியில் நாங்கள் ஆடிய போது ஈரப்பதத்தின் தாக்கமும் இல்லவே இல்லை. இன்றும் ஈரப்பதம் இருக்காது என நம்புகிறேன். ஆனால், என்ன நடக்குமென யாருக்கும் தெரியாது.
நாங்கள் ஒரு விதமான அட்டாக்கிங் அணுகுமுறையை நம்பி ஆடி வருகிறோம். அது எல்லா நாளிலும் கைகொடுக்காது. ஆனால், சரியாக க்ளிக் ஆகும் சமயங்களில் எதிரணிக்கு பெரும் ஆபத்தாக அமையும். நாங்கள் ஸ்கோரை நன்றாக டிபண்ட் செய்கிறோம். இந்தப் போட்டியையும் முதலில் பேட் செய்தே வெல்ல விரும்புகிறேன். இன்று அப்துல் சமத்துக்கு பதில் ஷபாஷ் அகமது அணிக்குள் வந்திருக்கிறார்.’ என பேட் கம்மின்ஸ் பேசினார்.
ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், ‘நான் டாஸை வென்றிருந்தாலுமே முதலில் பந்துதான் வீசியிருப்பேன். பிட்ச் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிய ஐடியா எங்களுக்கு முதலில் பேட் செய்வதன் மூலம் கிடைக்கும். இன்றைக்கு என்ன செய்யப்போகிறோம் என்பதில்தான் எங்களின் முழுக்கவனமும் இருக்கிறது. அடிப்படையான விஷயங்களில் கவனம் செலுத்தி எங்களின் திட்டங்களை சரியாக செயல்படுத்த வேண்டும்.
இறுதிப்போட்டியில் ஆடிய அனுபவமில்லாத வீரர்கள் எங்கள் அணியில் நிறையவே இருக்கிறார்கள். அவர்களுக்கு கொஞ்சம் பதற்றம்தான். அவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பும் கூட. எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை.’ என பேசினார்.
எந்த அணி வெல்லும் என்பதை கமென்ட்டில் தெரியப்படுத்துங்கள்!