ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி நடக்கவிருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதப்போகும் இறுதிப்போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கப்போகிறது.
கொல்கத்தா அணி நேரடியாக முதல் தகுதிச் சுற்றுப் போட்டியை வென்று இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறது. சன்ரைசர்ஸ் அணி முதல் தகுதிச்சுற்றில் கொல்கத்தாவிடம் வீழ்ந்து இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.
கொல்கத்தா, ஹைதராபாத் என இரண்டு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகளாகத்தான் தெரிகின்றன. இதனால் வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் அணி எது என்கிற எதிர்பார்ப்பு எல்லாருக்கும் இருக்கிறது. இந்நிலையில், முன்னாள் வீரர்களான மேத்யூ ஹேடனும் கெவின் பீட்டர்சனும் கொல்கத்தா அணிதான் கோப்பையை வெல்லும் எனக் கணித்திருக்கின்றனர்.
இது சம்பந்தமாக அவர்கள் பேசுகையில், ‘கொல்கத்தா அணிதான் இறுதிப்போட்டியை வென்று சாம்பியனாகப் போகிறது என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஏனெனில், அவர்களுக்கு சில நாட்கள் ஓய்வு கிடைத்திருக்கிறது. இரண்டாம் தகுதிச்சுற்றில் சன்ரைசர்ஸ் அணி எப்படி ஆடியிருக்கிறது என்பது ஆய்ந்து கொள்ளும் வாய்ப்பும் கொல்கதாவுக்கு கிடைத்திருக்கிறது. இதெல்லாம் அவர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.
அதுபோக வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் என இரண்டு தரமான ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். அவர்கள் செம்மண் களத்தில் சிறப்பாக வீசுவார்கள். கொல்கத்தா அணி அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை வழக்கம்போல சரியாக செய்தாலே போதும்.’ என மேத்யூ ஹேடன் பேசியிருக்கிறார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பேசுகையில், ‘அகமதாபாத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஆடிய விதமும் விக்கெட்டுகளை இழந்த விதமும் எனக்கு பிடிக்கவே இல்லை. அதனாலயே இறுதிப்போட்டியில் அவர்கள் ஒரு படி பின்னால்தான் இருக்கிறார்கள். கொல்கத்தா அணி கடந்த மூன்று நான்கு நாட்களாக நன்றாக இளைப்பாறியிருக்கிறார்கள். அதுபோக முதல் தகுதிச்சுற்றுப் போட்டியையும் சௌகரியமாக வென்றிருக்கிறார்கள்.
கொல்கத்தா அணியில் இருக்கும் வீரர்கள் எல்லாருமே மேட்ச் வின்னர்களாக இருக்கிறார்கள். அவர்களின் ஸ்பின்னர்களும் நல்ல பார்மில் இருக்கிறார்கள்.’ என பேசியிருக்கிறார்.
உங்களின் கணிப்புப்படி எந்த அணி வெல்லும் என்பதை கமென்ட்டில் தெரியப்படுத்துங்கள்.