KKR : `அதே மைதானம்; அதே வெற்றி!' மூன்றாவது முறையாக சாம்பியனான கொல்கத்தா!

இதே சேப்பாக்கத்தில் 2012 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி முதல் முறையாக சாம்பியன் ஆகியிருந்தது. அது ஒரு சவாலான போட்டி. கொஞ்சம் நெருக்கமாக சென்றிருந்தது. 12 ஆண்டுகள் கழித்து சேப்பாக்கத்தில் மீண்டும் இறுதிப்போட்டி.

இப்போதும் கொல்கத்தா இறுதிப்போட்டியில் ஆடியிருக்கிறது. ஆனால், எந்தச் சவாலும் இல்லை. சன்ரைசர்ஸ் அணியை மிகச் சுலபமாக வீழ்த்தியிருக்கிறது கொல்கத்தா அணி. கையோடு மூன்றாவது முறையாக கோப்பையையும் வென்றிருக்கிறது. சன்ரைசர்ஸ் எங்கே சொதப்பியது?

KKR v SRH

‘நாங்கள் ஒரு அணுகுமுறையை நம்புகிறோம். அது எல்லா நாளிலும் கைகொடுக்காது. ஆனால், கைக்கொடுக்கும்பட்சத்தில் எதிரணிக்கு ஆபத்தாக அமையும்.’ என்கிற எச்சரிக்கையோடுதான் டாஸை வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார் பேட் கம்மின்ஸ். ஆனால், அவர் அச்சப்பட்டதைப் போலவே அவர்களின் அணுகுமுறை இன்று அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 200+ ரன்களை அடித்தால் மட்டும்தான் கொல்கத்தா அணியைக் கட்டுப்படுத்த முடியும் என்கிற நிலை. ஆனால், சன்ரைசர்ஸ் அணியின் பேட்டர்கள் கடுமையாக சொதப்பினர். 20 ஓவர்களைக் கூட அவர்களால் முழுமையாக நிறைவு செய்ய முடியவில்லை. 113 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகினர்.

Starc

முதல் ஓவரிலிருந்தே சன்ரைசர்ஸ் அணியின் சொதப்பல் தொடங்க ஆரம்பித்துவிட்டது. ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே அபிஷேக் காலி. டெஸ்ட் போட்டியில் திரும்புவதைப் போல அங்கும் இங்கும் பந்து திரும்பியது. மிடில் ஸ்டம்ப் லைனில் பிட்ச் ஆகி ஆப் ஸ்டம்பை பறிக்கும் டெலிவரியை வீசி ஸ்டார்க் அசத்தினார். அடுத்த ஓவரிலேயே அரோரா ஹெட்டை எட்ஜ் ஆக்கி கீப்பரிடம் கேட்ச் ஆக வைத்தார். ஒப்பனர்கள் இருவரும் காலி. சன்ரரைசர்ஸூக்கு பெரிய பின்னடைவு. அந்த அணியின் ஓப்பனர்கள் சொதப்பியதுதான் சன்ரைசர்ஸ் அணி கோப்பையை இழக்க மிக முக்கிய காரணம்.

இதே பவர்ப்ளேயில் ஸ்டார்க் ராகுல் திரிபாதியின் விக்கெட்டையும் வீழ்த்தினார். அதுவும் முக்கியமான விக்கெட். ஏனெனில், கடந்த இரண்டு போட்டிகளிலுமே அவர்தான் இக்கட்டான கட்டத்தில் நின்று நன்றாக ஆடினார். இங்கே அவரை நிற்கவிடாமல் வெளியேற்றியது கொல்கத்தாவுக்கு மேலும் வலு சேர்த்தது. டாப் ஆர்டர் காலி. மார்க்ரமும் க்ளாசனும் க்ரீஸில் நின்றனர். பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர். ஆனால், வருணும் சுனிலும் பந்தை கையில் எடுக்கும் முன்பே சன்ரைசர்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதுதான் பெரிய பிரச்சனை. எனில், சன்ரைசர்ஸ் எவ்வளவு பின் தங்கி இருந்தது என்பதை பாருங்கள்.

மார்க்ரமின் விக்கெட்டை ரஸல் எடுத்துக் கொடுக்க ஹர்ஷித் ராணா க்ளாசன் மற்றும் நிதிஷ் ரெட்டியின் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். எந்த ஒரு வீரராலும் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. கொஞ்சம் கூட போராட்டத்தையோ சவாலையோ சன்ரைசர்ஸ் அணி கொடுக்கவில்லை. கொல்கத்தா அணி எந்த இடத்திலும் விடாமல் தொடர்ந்து இறுக்கிப் பிடித்தது. ஒரு பார்ட்னர்ஷிப் கூட அமையாமல் பார்த்துக் கொண்டது. இம்பாக்ட் ப்ளேயராக அப்துல் சமத் வந்தார். பிரயோஜனமில்லை. கம்மின்ஸ் எதோ முயன்று பார்த்தார். பிரயோஜனமில்லை. 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஐ.பி.எல் வரலாற்றிலேயே இறுதிப்போட்டியில் எடுக்கப்பட்ட மிகக்குறைந்த ஸ்கோர் இதுதான். ஐ.பி.எல் வரலாற்றின் அதிகபட்ச ஸ்கோரை அடித்திருக்கும் ஒரு அணி இப்படியொரு சாதனையையும் செய்தது பெரும் முரண்.

கொல்கத்தா அணிக்கு சவாலே இல்லை. இன்னிங்ஸ் ப்ரேக்கிலேயே அவர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தை தொடங்கியிருக்கக்கூடும். 114 என்பதெல்லாம் கொல்கத்தாவுக்கு சவாலே கிடையாது. அவர்களிடம் இருப்பவர்கள் எல்லாருமே மேட்ச் வின்னர்கள். எதிர்பார்த்ததை போலவே கொல்கத்தா சிரமப்படவும் இல்லை. பவர்ப்ளேயில் மட்டும் 72 ரன்களை அடித்தார்கள். சுனில் நரைனை கம்மின்ஸ் வீழ்த்திய போதும் வேகம் குறையவே இல்லை. குர்பாஸ் நின்று ஆட இன்னொரு பக்கம் வெங்கடேஷ் ஐயர் மைதானத்தின் நாலாபுறமும் பேட்டை சுழற்றி அசத்தினார். எந்த பௌலராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. சிக்சரும் பவுண்டரியுமாக வந்துகொண்டே இருந்தது. எவ்வளவு சீக்கிரம் போட்டியை முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போட்டியை முடிக்க நினைத்தனர்.

கொல்கத்தாவை புயல் மையம் கொண்டிருப்பதாக செய்திகள் வந்தது. ஆனால், உண்மையில் கொல்கத்தா அணி ஆடிய சேப்பாக்கத்தில்தான் புயல் மையம் கொண்டிருந்ததைப் போல இருந்தது. வெங்கடேஷ் ஐயரின் அதிரடியில் 11 ஓவர்களுக்குள்ளாகவே கொல்கத்தா அணி போட்டியை வென்றது. சிறப்பான ஆட்டம். ஆதிக்கமிக்க ஆட்டம். சாம்பியன் ஆவதற்கான அத்தனை தகுதிகளும் தங்களுக்கு இருக்கிறது என்பதை வெளிக்காட்டிய ஆட்டம். விளைவு, 2014 க்குப் பிறகு 10 ஆண்டுகள் கழித்து கொல்கத்தா மீண்டும் சாம்பியன் ஆகியிருக்கிறது.

கொண்டாட்டத்தில் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் கொல்கத்தாவிற்கு வாழ்த்துகள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.