நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. மோடி அரசு அடுத்த ஆட்சியில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தும். தற்போது கடும் வெயிலில் தேர்தல் நடப்பதைக் காட்டிலும், குளிர்காலம் அல்லது ஆண்டின் வேறு சில காலநிலையில் தேர்தல்களை நகர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி சிந்திக்கிறோம். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் செலவுகளும் குறையும்.
பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அனைத்து மாத அமைப்புகளுடனான விரிவான ஆலோசனைக்குப் பிறகு அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். UCC என்பது நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களால் சுதந்திரம் பெற்றதிலிருந்து நமது பாராளுமன்றம், மாநில சட்டமன்றங்களுக்கும் நிறைவேற்ற விடப்பட்ட பொறுப்பு. அரசியலமைப்புச் சபையால் எங்களுக்காக வழங்கப்பட்ட கொள்கை திட்டங்களில் UCC-யும் அடங்கும்.
கே எம் முன்ஷி, ராஜேந்திர பாபு, அம்பேத்கர் போன்ற சட்ட அறிஞர்கள், மதச்சார்பற்ற நாட்டில் மதத்தின் அடிப்படையில் சட்டங்கள் இருக்கக்கூடாது என்று கூறியுள்ளனர். எனவே UCC கொண்டுவரப்பட வேண்டும். உத்தரகாண்டில் UCC-யை பா.ஜ.க சோதனையாக அமல்படுத்தியிருக்கிறது. அங்கு பெரும்பான்மையாக மாநிலத்திலும் மத்தியிலும் பா.ஜ.க அரசு இருந்ததால் தான் இது சாத்தியமானது. UCC ஒரு பெரிய சமூக, சட்ட, மத சீர்திருத்தம் என்று நான் நம்புகிறேன்.
இதுபற்றி விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. இந்த விரிவான விவாதத்திற்குப் பிறகு உத்தரகாண்ட் அரசு செய்த மாதிரிச் சட்டத்தில் ஏதாவது மாற்றம் இருந்தால், இந்த சட்டம் சமூக, சட்டரீதியான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். மதத் தலைவர்களிடமும் கருத்து கேட்க வேண்டும். யாராவது நிச்சயமாக நீதிமன்றத்திற்கு செல்வார்கள். நீதித்துறையின் கருத்தும் வரும்.
அதற்குப் பிறகு, நாட்டின் மாநில சட்டமன்றங்களும் நாடாளுமன்றமும் இதைப் பற்றி தீவிரமாகச் சிந்தித்து ஒரு சட்டம் இயற்ற வேண்டும். அனைத்து பெண்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை பாரதம் ஏற்றுக்கொள்ளும் வரை பாலின சமத்துவம் வரமுடியாது என்று பா.ஜ.க நம்புகிறது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை உருவாக்குவதை பா.ஜ.க நோக்கமாகக் கொண்டுள்ளது. இதை நிறைவேற்ற ஐந்து ஆண்டுகள் போதுமான காலம்” என்றார்.