பிசினஸ் உலகில் கால்பதித்து, வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் மற்றும் நட்சத்திரங்களாக மின்னிக்கொண்டிருக்கும் பெண்களை அடையாளம் காட்டும், அங்கீகரிக்கும் பகுதி… இந்த #HerBusiness. தங்களது புதுமையான சிந்தனைகள், அதைச் செயல்படுத்திய விதம், அணுகுமுறை உள்ளிட்ட பல காரணிகள் மூலம் தொழிலில் ஜெயித்து வரும் இவர்களது வெற்றிக்கதைகள், மற்றவர்களையும் ஊக்கப்படுத்தும். புதிதாக உருவெடுக்க வைக்கும்!
“நமக்கென ஒரு கனவு இருந்தால், அதை நோக்கி நாம் அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைத்தால் அக்கனவை ஒருநாள் நிச்சயம் நினைவாக்கலாம்” என்கிறார் கோவில்பட்டியைச் சேர்ந்த நிவேதா. ezhil_ornaments என்ற பெயரில், கோவில்பட்டியில் இருந்தபடி ஆன்லைன் ஃபேஷன் அக்ஸசரீஸ் வணிகத்தை இந்தியா முழுக்கச் செய்துவரும் இவரது பிசினஸ் பயணம், சென்னை மாதிரியான பெருநகரங்களிலிருந்து மட்டும்தான் பிசினஸ் செய்யமுடியும் என்றில்லை, சரியாகக் கணித்து, களத்தில் இறங்கினால், சிறு நகரங்களிலிருந்தும் பிசினஸில் சக்சஸ் சிக்ஸர் அடிக்கமுடியும் என்ற பெரும் பாடத்தை நமக்குச் சொல்கிறது.
“என்னுடைய சொந்த ஊர் மதுரை. திருமணம் முடிந்து கோவில்பட்டியில் வசித்து வருகிறேன். என் அப்பா பலசரக்குக் கடை வைத்திருந்தார். அவரைப் பார்த்தே வளர்ந்ததால் சிறுவயது முதலே பிசினஸ் மீது எனக்கும் ஒருவித ஆர்வம் இருந்து வந்தது” என்கிறார் நிவேதா.
“அடிப்படையில் நான் ஒரு பொறியியல் பட்டதாரி. படிப்பை முடித்தவுடனேயே 2018-ம் ஆண்டு எனக்குத் திருமணம் ஆகிவிட்டது. மகள் பிறந்த பிறகு அவளைக் கவனிப்பதிலேயே நாள்கள் நகன்றன. ஆனாலும், என்னைச் சுற்றி பெண்கள் பலர் தொழில்முனைவோராக பிரகாசிப்பதைப் பார்த்தபோது, எனக்குள் இருந்த பிசினஸ் வுமன் விழித்துக்கொண்டாள்” என்கிற நிவேதா, கொரோனா காலகட்டத்தில் ஏதேனும் தொழில் ஒன்றைத் தொடங்கலாம் என்று யோசித்ததாகக் கூறுகிறார்.
“பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற நோக்கத்தைக் காட்டிலும், எனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் பிசினஸ் உலகில் கால்வைக்க முடிவு செய்தேன். பொதுவாகவே, எனக்கு ஃபேஷன் அக்ஸசரீஸ் மீது ஈர்ப்பு அதிகம். குறிப்பாக, நான் சிறுபிள்ளையாக இருந்த காலத்தில் என் அம்மா வளையல், தோடு, க்ளிப், போன்றவற்றை எனக்கு வாங்கிக் கொடுக்கும் காலத்திலிருந்தே அவை குறித்து நிறைய தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் இருக்கும். இதுவே இந்த பிசினஸிற்குள் நான் காலடி எடுத்து வைப்பதற்கான காரணமாகவும் அமைந்தது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், ரூ.7,500 முதலீட்டில் ஃபேஷன் அக்ஸசரீஸ் ஆன்லைன் வணிகத்தை தொடங்கினேன். பேஷன் அக்ஸசரீஸ் பொருள்களை மொத்தவிலையில் விற்கும் கடைகள் குறித்து வீடியோக்கள் வழியாகத் தெரிந்துகொண்டேன். அக்கடைகளை அணுகி ஆன்லைன் விற்பனைக்குத் தேவையானவற்றை வாங்கினேன்.
இதற்கு அடுத்தகட்டமாக. ezhil_ornaments என்ற பெயரில் இன்ஸ்டா அக்கவுன்ட் ஒன்றைத் தொடங்கி அதில் அவற்றை டிஸ்ப்ளே செய்தேன். இந்தத் தொழிலைத் தொடங்கிய ஓரிரு மாதங்கள்வரை, பெரிதாக ஆர்டர்கள் கிடைக்கவில்லை. அதன்பின்னரே கொஞ்சம் கொஞ்சமாக ஆர்டர்கள் வரத் தொடங்கின. நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு மாதம் ஒன்றுக்கு 10 ஆர்டர்கள் என்ற அளவில் வரத் தொடங்கின. குறைந்தபட்சம் நூறு ரூபாயிலிருந்து ஆர்டர்கள் எடுக்கிறேன். ஒருசமயம் ஒரே வாடிக்கையாளர் 16,000 ரூபாய்க்கு பல்க் ஆர்டர் கொடுத்தது என் தொழில் மீது எனக்கு மிகப் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.
தற்போது, மிசோரம் போன்ற பகுதிகளிலிருந்தும்கூட எனக்கு பல்க் ஆர்டர்கள் வருகின்றன. என் வீட்டின் ஒரு அறையையே என் தொழிலுக்கான களமாக மாற்றி பிசினஸ் வேலைகளைச் செய்து வருகிறேன். குறிப்பாக, வெஸ்டர்ன், டிரெடிஷன் இரண்டிலும் விதவிதமான காதணிகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான க்ளிப், ஹேர் பேன்ட் போன்ற ஹேர் அக்ஸசரீஸ் வகைகள், மற்றும் நெக் பீஸ் கலெக்ஷன்ஸ், பிரேஸ்லெட் கலெக்ஷன்ஸ் போன்றவற்றை ஆன்லைனில் விற்பனை செய்துவருகிறேன்” என்கிறார் நிவேதா.
“தொழில் சார்ந்த அறிவு மட்டுமல்லாமல், ஃபேஷன் அக்ஸசரீஸ் சார்ந்து லேட்டஸ்ட் டிரெண்டிங் குறித்த புரிதலும் சிறப்பாக இருக்கவேண்டும். அப்போதுதான் வாடிக்கையாளர்களை நம் பக்கம் இழுக்கமுடியும்” என்று இத்தொழில் குறித்த ஆலோசனைகளைப் பகிர்ந்துகொள்ளும் இவர், சந்தையில் விற்பனைக்கு வரும் விதவிதமான ஃபேஷன் அக்ஸசரீஸை சோர்ஸ் செய்து, அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி அதன் அடிப்படையில் பிசினஸ் ஆர்டர்களை எடுக்கிறார்.
இந்த வணிகத்தின் மூலமாக மாதம் ஒன்றுக்கு 40,000 – 45,000 ரூபாய்வரை டர்ன் ஓவர் செய்யும் இவர் பண்டிகை நாள்களில் இது இன்னும் அதிகரிக்கும் என்கிறார். அதுமட்டுமல்லாமல், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தைப் பார்த்துவிட்டு ஃபேஷன் அக்ஸசரீஸ் வாங்குவதற்காக தன் வீடு தேடி வரும் கோவில்பட்டி மக்களுக்கு நேரடி பிசினஸ் சேவையையும் வழங்கி வருகிறார்.
லேட்டஸ்ட் ஃபேஷன் முதல் எவர்க்ரீன் ஃபேஷன் வரை அனைத்து அக்ஸசரீஸ்களையும் மக்கள் ஒரே இடத்தில், எளிதில் வாங்கும் வண்ணம் கோவில்பட்டியில் பிரத்யேகமாக ஷாப் ஒன்றை அமைக்கவேண்டும் என்கிற கனவு தனக்கிருப்பதாகச் சொல்லும் நிவேதா, கோவில்பட்டியில் போஸ்ட்டல் மூலமாக அதிக எண்ணிக்கையில் பொருள்களை அனுப்பி வைத்து பிசினஸ் செய்த காரணத்திற்காக, அங்குள்ள தபால் துறையால் சமீபத்தில் கவுரவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிசினஸில் வெற்றி மேல் வெற்றி உங்களைச் சேரட்டும் நிவேதா!