பாலிசி தொகையை வழங்குவதைத் தவிர்க்கும் நோக்கில் காப்பீட்டு நிறுவனங்கள் தெளிவற்ற முறையில் நிபந்தனைகளை குறிப்பிடுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நம் நாட்டில குறைந்த அளவிலான மக்களே ஆயுள் காப்பீடு திட்டங்களை எடுத்து வந்த நிலையில் இன்று அதன் தேவை கருதி பெரும்பாலான மக்கள் காப்பீடு எடுத்து வருகிறார்கள். பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமில்லாமல் தனியார் நிறுவனங்களில் ஆயுள் காப்பீடுடன், மருத்துவ காப்பீடு, வீடு, வாகனம், வீட்டு உபயோக பொருள்கள் என அனைத்துக்கும் காப்பீடு எடுத்து வருகின்றன. ஆனால், இந்த காப்பீடுகளின் பலனை பெறுவதில் தனியார் நிறுவனங்கள் இழுத்தடிப்பதாகவும், ஏதாவதொரு காரணத்தைக் கூறி நிராகரிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட காப்பீடு நிறுவனத்துக்கு எதிரான வழக்கில், ஆவணங்களில் தெளிவற்ற நிபந்தனைகளையும், மக்கள் புரிந்து கொள்ள முடியாத ‘மொழி’யிலும் காப்பீட்டு நிறுவனங்கள் குறிப்பிடுவதாக உத்தரவில் தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்டவருக்கு 4 வாரத்தில் காப்பீட்டுத் தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள டி.சி.பி. வங்கியில், 71 லட்சம் ரூபாய் கடன் பெற்ற லட்சுமி என்பவரின் கணவர், அந்த தொகைக்கு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் காப்பீடு செய்து, முறையாக பிரீமியமும் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி மாரடைப்பால் அவர் உயிரிழந்துள்ளார்.
அதைத்தொடர்ந்து காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி, லட்சுமி வங்கிக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால், ‘மரணத்துக்கான காரணம் தெரிவிக்கவில்லை; உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை; மாரடைப்பு காப்பீட்டில் வராது’ என்ற காரணங்களைக் கூறி, லட்சுமியின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து லட்சுமி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ”கொரோனா காலத்தில் மரணமடைந்ததால் பிரேத பரிசோதனை செய்யவில்லை, திருவேற்காடு நகராட்சி அளித்த சான்றிதழில் மாரடைப்பால் மரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது’ என வாதிடப்பட்டது.
‘கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும், காப்பீட்டு முறையீட்டு வாரியத்தை அணுகாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் விசாரணைக்கு உகந்ததல்ல” என வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
வங்கி தரப்பின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, “காப்பீட்டில் மாரடைப்பும் சேர்க்கப்பட்டுள்ளது, பாலிசி எடுத்த பின், முறையாக பிரீமியம் தொகை செலுத்தப்பட்டு வந்த நிலையில், காப்பீட்டு தொகையை வழங்க முடியாது என வங்கி கூற முடியாது” எனத் தெரிவித்து, காப்பீட்டு தொகையை வழங்க மறுத்த வங்கியின் உத்தரவை ரத்து செய்து, “நான்கு வாரங்களில் அந்த தொகையை மனுதாரருக்கு வழங்கவேண்டும்” என உத்தரவிட்டார்.
நீதிபதியின் உத்தரவில், “பாலிசி தொகையை வழங்குவதைத் தவிர்க்கும் வகையில், காப்பீட்டு நிறுவனங்கள் தெளிவற்ற முறையில் நிபந்தனைகளை குறிப்பிடுகிறது, மக்கள் புரிந்து கொள்ள முடியாத மொழியில் குறிப்பிடுகிறது. இந்த நிபந்தனைகள் பற்றி தனி நபர்களுக்கு அறிவு இருக்காது. இதை பயன்படுத்தி, காப்பீட்டுத் தொகையை வழங்குவதை வேண்டுமென்றே புறக்கணித்து விடுகின்றன. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகி உரிமையைப் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்” என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.