வடமேற்கு கர்நாடக சாலையில், ஓடும் பேருந்தில் ரீல்ஸ் செய்ததற்காக ஓட்டுநர் மற்றும் நடத்துனரை சஸ்பெண்ட் செய்துள்ளது, அந்த மாநிலப் போக்குவரத்து துறை. ஓட்டுநர் ஹனுமந்தாப்பாவும், நடத்துனர் அனிதாவும் ஓடும் பேருந்தில் ரீல்ஸ் செய்துள்ளனர். அதில் ஓட்டுநர் குடையைப் பிடித்துக்கொண்டு பேருந்தை ஓட்டுவதுபோல ரீல்ஸ் செய்துள்ளார். இதனை அனிதா வீடியோ எடுத்திருக்கிறார். இது பலத்த மழையின் காரணமாக பஸ்ஸின் மேற்கூரை ஒழுகி தண்ணீர் கசிவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வைரலாகப் பரவியதால், நெட்டிசன்கள் NWKRTC அரசு பேருந்துகள் மோசமான நிலையில் இருப்பதாக கருத்து தெரிவித்து வந்தனர்.
இது தொடர்பாக ANI என்ற நியூஸ் சேனலில் NWKRTC நிர்வாக இயக்குநர் பிரியங்கா பேசியுள்ளார். அதில் “இந்தச் சம்பவத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு, NWKRTC பேருந்தை ஆய்வு செய்ததில் பேருந்தின் மேற்கூரையில் கசிவு இல்லை என்பதும், பொழுதுபோக்கிற்காக ஒட்டுநரும் நடத்துனரும் இவ்வாறு ரீல்ஸ் செய்ததும் கண்டறியப்பட்டது.
இருப்பினும், NWKRTC பேருந்துகளை மோசமாக தோற்றத்தில் காட்டியதற்காக ஒட்டுநர் மற்றும் நடத்துனரை இடைநீக்கம் செய்து, அவர்களுக்கு எதிராக துறைரீதியான விசாரணையை மேற்கொண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். ஓடும் பேருந்தில் இருந்தபடியே இவ்வாறு ரீல்ஸ் செய்த சம்பவம், அப்பகுதியில் பேசுபொருளாகி உள்ளது.