உடுமலை: அமராவதி அணையின் நீர் ஆதாரமான சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதைக் கண்டித்து தாராபுரத்தில் திங்கள்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விவசாயிகள் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கையை விளக்கி விசிக விவசாயிகள் அமைப்பின் மாநில துணைச் செயலாளர் வேலு சிவக்குமார் பேசியது: “அமராவதி அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதிகளான பாம்பாற்றின் துணை ஆறான பட்டிசேரியில ஏற்கெனவே அணை கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலந்தி ஆற்றைத் தடுத்து தடுப்பணை கட்டி வருகிறது கேரள அரசு. இதனால் அமராவதி அணைக்கு வரும் நீர் வரத்து பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் அமராவதி ஆற்றின் மூலம் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நெல் பயிரிடும் விவசாய நிலங்கள் மற்றும் தென்னை, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர் நிலங்களும் பயன் பெற்று வருகின்றன. இப்போதே இரண்டு போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாமல் கஷ்டப்படும் விவசாயிகளுக்கு கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் ஒரு போக நெல் சாகுபடிக்கே தண்ணீர் கிடைக்காது.
தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உரிய அனுமதி பெறாமல் சிலந்தியாற்றின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளையும் கேரள அரசு மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிட்டது. இதேபோல் தமிழக முதல்வர் அமராவதி பாசன விவசாயிகளின் அச்சத்தை போக்கும் வகையில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை நிறுத்த கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதை வரவேற்கிறோம்.
காவிரி ஆணைய உத்தரவின்படி 3 டிஎம்சி தண்ணீரை கேரளாவுக்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தம் இருக்குமேயானால் அதனை கண்காணிக்க தேவையான ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அந்தக் கண்காணிப்புக் குழு இரு மாநில விவசாயிகளுக்கும் வெளிப்படை தன்மையோடு செயல்படுவதை உறுதி செய்து கொண்டு அந்த அமைப்பின் மேற்பார்வையில் தான் 3 டிஎம்சி தண்ணீர் எடுக்கப்பட வேண்டும். கேரள அரசு விரும்பியபடி அணைகளை கட்டுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்று பேசினார்.
தாராபுரத்தில் உள்ள அண்ணாசிலை முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் ஓவியர் மின்னல் தலைமை வகித்தார். திருப்பூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் மண்டல செயலாளர் ஜல்லிப்பட்டி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.