குஷிநகர்(உத்தரப்பிரதேசம்): இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களைக்கூடத் தாண்டாது என தெரிவித்துள்ள அமித் ஷா, தேர்தல் முடிவை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியை மல்லிகார்ஜுன கார்கே இழப்பார் என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் குஷி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “முதல் 5 கட்டத் தேர்தல்களில் மோடி 310 இடங்களைக் கடந்துவிட்டார். 6 மற்றும் 7வது கட்டத் தேர்தலுக்குப் பிறகு அவர் 400-ஐ தாண்ட வேண்டும். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40-ஐ கூட தாண்ட முடியாது. சமாஜ்வாதி கட்சி 4 இடங்களைத் தாண்டாது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு நரேந்திர மோடிதான் பிரதமராக இருப்பார் என்று நாட்டு மக்கள் முடிவு செய்துள்ளனர்.
ஜூன் 4ஆம் தேதி மோடி, பாஜக, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகியவற்றின் வெற்றி நிச்சயம். ஜூன் 4-ம் தேதி மதியம் ராகுல் காந்தியின் ஆட்கள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தால் தோற்றுவிட்டோம் என்று சொல்வதை நீங்கள் பார்ப்பீர்கள். அதோடு, தோல்விக்கான பழி மல்லிகார்ஜுன கார்கே மீது விழும். அவர் தனது பதவியை இழப்பார்.
குஷிநகர்‘சர்க்கரை கிண்ணம்’ என்று அழைக்கப்படக்கூடிய அளவுக்கு பிரபலமானது. ஆனால் உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர்களான மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் 5-6 சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டன. அதேசமயம், எங்கள் ஆட்சிக் காலத்தில் 20 சர்க்கரை ஆலைகளை மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு 38 சர்க்கரை ஆலைகளின் திறனை உயர்த்தும் பணியை செய்துள்ளது. கரும்பு விதைப்பு பரப்பளவும் 9 லட்சம் ஹெக்டேர் அதிகரித்துள்ளது.
1995 முதல் 2017 வரை, சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 23 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கப்பட்டது. அதேசமயம், 2017 முதல் 2024 வரை, பாஜக அரசு 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இவர்கள் பொய்களின் அடிப்படையில் வாழக்கூடியவர்கள்.
இண்டியா கூட்டணியினர், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவோம் என்று கூறியுள்ளனர். ஒருவேளை தவறுதலாக அவர்கள் வெற்றி பெற்றுவிட்டால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களின் இடஒதுக்கீட்டைப் பறித்து அவர்கள் முஸ்லிம்களுக்கு வழங்குவார்கள். கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் செய்ததை இண்டியா கூட்டணி மேற்கு வங்கத்திலும் செய்தது. ஆனால் அங்குள்ள உயர் நீதிமன்றம் அதைத் தடை செய்தது.
முஸ்லிம் இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டத்தின்படி இல்லை. தங்கள் வாக்கு வங்கியை திருப்திப்படுத்த முஸ்லிம் இடஒதுக்கீடு பற்றி இண்டியா கூட்டணியினர் பேசுகிறார்கள். இதன் நேரடி விளைவுகளை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்தான் அனுபவிக்க வேண்டும். ஆனால், கவலை வேண்டாம், அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் அல்லது நாங்கள் அதை நடக்க விட மாட்டோம். நரேந்திர மோடியும், பாஜகவும் இருக்கும் வரை பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை யாராலும் தொட முடியாது. இந்த நாட்டில் மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அனுமதிக்க மாட்டோம்.
அயோத்திக்குச் சென்ற கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது சமாஜ்வாதி அரசுதான். கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கும் ராமர் கோயில் கட்டியவர்களுக்கும் இடையேயான தேர்தல் இது. ராமஜென்மபூமி விவகாரம், சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே 70 ஆண்டுகளாக சிக்கித் தவித்தது. 5 ஆண்டுகளுக்குள், இந்த வழக்கில் வெற்றி பெற்று நரேந்திர மோடி பூமி பூஜை செய்தார். அதனைத் தொடர்ந்து பிராண பிரதிஷ்டை விழாவையும் நடத்தி முடித்தார். ராமர் கோயிலைக் கட்டியது மட்டுமின்றி, அவுரங்கசீப்பால் இடித்துத் தள்ளப்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலையும் மோடி கட்டினார்.
பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது. எனவே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கேட்க வேண்டாம் என கூறுகிறது அக்கட்சி. காங்கிரஸ் கட்சி அணுகுண்டுக்கு பயப்படலாம். பாஜக பயப்படாது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமானது. நாங்கள் அதனை மீட்போம்” என தெரிவித்தார்.