புதுடெல்லி: நாட்டின் பெரும்பாலான மானாவாரி விவசாய பகுதிகளை உள்ளடக்கிய பருவமழை மைய மண்டலத்தில் தென்மேற்குப் பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு ஜூன் – செப்டம்பர் மாதங்களுக்கான தென்மேற்கு பருவமழையின் தொலைநோக்கு முன்னறிவிப்பு கண்ணோட்டத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.
2024 ஜூன் மாதத்துக்கான மாதாந்திர மழை மற்றும் வெப்பநிலை முன்னறிவிப்பையும் டெல்லியில் மெய்நிகர் ஊடக உரையாடலில் வானிலை ஆய்வு மையத் தலைமை இயக்குநர் டாக்டர் மிருதுஞ்சிய மொஹபத்ரா இந்த முன்னறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, அளவு ரீதியாக, நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை நீண்ட கால சராசரியில் (எல்பிஏ) 106% ஆக இருக்கும். மாதிரிப் பிழை ± 4% ஆகும். எனவே, 2024 ஆம் ஆண்டு பருவமழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்குப் பருவமழை (ஜூன் முதல் செப்டம்பர் வரை) இந்தியாவின் மத்திய மற்றும் தெற்கு தீபகற்ப பகுதியில் (எல்பிஏ>106%) இயல்பை விட அதிகமாக இருக்கும், வடமேற்கு இந்தியாவில் இயல்பாகவும் (எல்பிஏ 92-108%) வடகிழக்கு இந்தியாவில் (எல்பிஏ <94%) இயல்புக்கு குறைவாகவும் இருக்கும்.
நாட்டின் பெரும்பாலான மானாவாரி விவசாய பகுதிகளை உள்ளடக்கிய பருவமழை மைய மண்டலத்தில் தென்மேற்குப் பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் (எல்பிஏ >106%) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது