காசா: தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் நேற்று (மே 26) நடத்திய தாக்குதலில் 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 249 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், ஹமாஸ் போராளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் நேற்று குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 249 பேர் காயமடைந்துள்ளதாக காஸாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீன அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜபாலியா, நுசிராத் மற்றும் காசா நகரம் உள்ளிட்ட பிற பகுதிகளில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் தங்கியிருந்த தங்குமிடங்களை இஸ்ரேலியப் படைகள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதில் பலர் உயிரிழந்தனர். ஹமாஸ் போராளிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
2023 அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 36,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 81,026 பேர் காயமடைந்துள்ளனர். தற்போது ஹமாஸின் தாக்குதலில் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 ஆக உள்ளது, மேலும், பலர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய தாக்குதலுக்கு எகிப்து, ஜோர்டான், குவைத் மற்றும் கத்தாரில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பச்சிளம் குழந்தைகள் உட்பட மனிதர்கள் உயிரோடு எரிக்கப்பட்டு துண்டாக்கப்பட்டனர். இந்த இனப்படுகொலை முடிவுக்கு வர வேண்டும் என Jewish Voice for Peace என்ற மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் பட்டினி தலைவிரித்தாடும் நிலையில், குழந்தைகள் உணவைத் தேடும் காட்சிகள் வெளியாகி மக்களின் கண்களை நிரப்புகின்றன.