பெங்களூருவில் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த இருவரை ஒரே வாரத்தில் அடுத்தடுத்த கொலைசெய்த நபரை போலீஸார் கைதுசெய்தனர். முன்னதாக, மே 12-ம் தேதி இரவு பனசங்கரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே.ஆர் சாலையில் 20 வயது நபர் ஒருவர் கல்லால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டு கிடந்ததை அடுத்தநாள் போலீஸார் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து, மே 19-ம் தேதி அதேபோல கே.ஆர் மார்க்கெட் அருகே 20 வயது நபரின் சடலம் போலீஸாரால் கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கொலையும் கல்லால் தாக்கப்பட்டுதான் நடந்திருக்கிறது என்பதை போலீஸார் உறுதி செய்தனர்.
பின்னர் இதில் தீவிர விசாரணை மேற்கொண்ட பனசங்கரி போலீஸார், கே.ஆர் சாலை சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆராய்ந்தபோது இந்தக் கொலை தொடர்பாக கிரிஷ் (26) என்பவர் அடையாளம் காணப்பட்டார். மேலும், 30 சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆராய்ந்த போலீஸார் அவர் ஏற்கெனவே பாலியல் துன்புறுத்தல், கொள்ளை போன்ற வழக்குகளில் சிக்கியிருக்கிறார் என்பதை கண்டறிந்தனர். கடந்த 2020-ல் 10 மாத சிறைத் தண்டனைக்குப் பிறகு வெளிவந்த கிரிஷ், ஒரு ஹோட்டலில் உதவியாளர், கட்டுமானத் தொழிலாளி என பல வேலைகளைப் பார்த்துவந்தார் என்று விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில், கிரிஷ் கைதுசெய்யப்பட்டதாக போலீஸார் நேற்று தெரிவித்தனர். விசாரணையில் மே 12, 19 ஆகிய தேதிகளில் நடந்த கொலைகளைச் செய்ததை அவரே ஒப்புக்கொண்டார். இதில், மே 12-ல் கொல்லப்பட்டவர் யார் என்று இன்னும் கண்டறியப்படவில்லை. கையில் VP, NTR என பச்சை குத்தப்பட்டிருந்த நபர் சிகரெட் கொடுக்காததால் கிரிஷ் அவரைக் கொன்றதாகப் போலீஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், மே 19-ம் தேதி கொல்லப்பட்ட சுரேஷ் என்பவர் கிரிஷுக்கு ஏற்கெனவே தெரியும் என்றும் மது வாங்க அவர் பணம் கொடுக்காததால் கிரிஷ் அவரைக் கொன்றுவிட்டு அவரின் செல்போனை எடுத்துவிட்டுச் சென்றார் என்றும் போலீஸார் கூறுகின்றனர். இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரியொருவர், `மனித உயிர்களைப் பற்றி கிரிஷுக்கு எந்தவொரு வருத்தமோ அல்லது கவலையோ இல்லை. அவர் பிடிபடாமலிருந்தால், இன்னும் நிறைய கொலைகளை அவர் தொடர்ந்திருப்பார்‘ என்று தெரிவித்தார்.