புதுடெல்லி: புலம்பெயர்ந்தோருக்கான ஐ.நா. சர்வதேச அமைப்பு நேற்று கூறியுள்ளதாவது: கடந்த வெள்ளிக்கிழமை பப்புவா நியூ கினியாவின் யம்பலி கிராமத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில், 670 பேர் வரை உயிரிழந்துள்ளது முதல் கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. இறந்தவர்களின் உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டு வருவதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நிலச்சரிவு பகுதியில் எஞ்சியுள்ள குடியிருப்புவாசிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த இயற்கை பேரழிவில் சர்வதேச உதவியை கோருவது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்கள் 6 முதல் 8 மீட்டர் (20 முதல் 26 அடி) ஆழ இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு வருகிறது. எனவே, கடந்த வெள்ளிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், இனி உயிருடன் மீட்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளது. எனவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று மீட்பு படையினர் கூறியுள்ளனர். இவ்வாறு அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.