புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தைகள்: சென்செக்ஸ் 269.28 புள்ளிகள் உயர்வு

மும்பை:

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இன்னும் ஒரு கட்ட வாக்குப்பதிவு மட்டுமே எஞ்சி உள்ள நிலையில், இந்திய பங்குச் சந்தைகளில் சாதகமான போக்கு தொடர்கிறது. முதலீட்டாளர்களிடையே உள்ள நம்பிக்கையான போக்கு மற்றும் உலக சந்தைகளில் ஏற்பட்டுள்ள ஏற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்றம் பெற்றன. இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி புதிய உச்சத்தை எட்டின.

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 269.28 புள்ளிகள் உயர்ந்து 75,679.67 என்ற உச்சத்தை அடைந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 86.1 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சமான 23,043.20 புள்ளிகளை எட்டியது.

சென்செக்ஸ் கணக்கிட பயன்படும் 30 நிறுவனங்களில் டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல், கோட்டக் மஹிந்திரா வங்கி, சன் பார்மா, ஆக்சிஸ் வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின. விப்ரோ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, மாருதி மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் பின்னடைவை சந்தித்தன.

ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகிய சந்தைகளில் சாதகமான போக்கு காணப்பட்டது. உலகின் மிகப்பெரிய பங்குச் சந்தையான அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் சந்தையும் வெள்ளிக்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்திருந்தது.

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 4-ம் தேதி வெளியிடப்பட உள்ளன. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.