புதுச்சேரி: நெரிசலான புதுச்சேரி பகுதியில் அபாயகர படப்பிடிப்புகள் தொடர்வதை அரசு கண்டுக்கொள்ளாததால் மக்கள் பதற்றம் அடைகின்றனர்.
புதுச்சேரியில் திரைப்பட படப்பிடிப்புகள் அதிகளவில் நடக்கிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி படங்கள் தொடங்கி பல்வேறு விளம்பர படப்பிடிப்புகளும் நடக்கிறது. குறிப்பாக பாடல்காட்சிகள்தான் அதிகளவில் படம் பிடித்தனர். தற்போது சண்டைக்காட்சிகளும் அதிகளவில் படம்பிடிக்கின்றனர். அண்மையில் லால் சலாம் தொடங்கி பல்வேறு வெப் சீரிஸ் சண்டைக்காட்சிகளும் புதுச்சேரியில் படப்பிடிப்பு நடந்தன. அவை மூடப்பட்டுள்ள ஏஎப்டி தொழிற்சாலைக்குள் நடந்தன.
தற்போது வெளிப்பகுதிகளிலும் அபாயகர படப்பிடிப்புகள் நடக்கத்தொடங்கியுள்ளன. பழைய துறைமுக வளாகத்தில் ஹெலிகாப்டரில் ரஜினி வந்து இறங்கி இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கினர். தற்போது நடிகர் விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஏ.எப்.டி பஞ்சாலை, கடற்கரை சாலை, பழைய துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடிகர் விஜய் நடித்த காட்சிகளும் பாடல் காட்சிகளும் படமாக்கப்பட்டது.
தற்போது கோட் படம் முடிவடைய உள்ள நிலையில் புதுவையில் இறுதி கட்ட சண்டை காட்சிகள் படப்பிடிப்பு நடந்தது. புதுவை பழைய துறைமுக வளாகத்தில் நடைபெற்ற சண்டை காட்சியில் ஒரு கார் மற்றொரு கார் மீது விழுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது பயங்கரமான சத்தம் கேட்டதால் பழைய துறைமுகத்திற்கு அருகில் உள்ள மக்கள் கடுமையாக அச்சமடைந்தனர்.
அதுமட்டுமில்லாமல் நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை புதுச்சேரி கிழக்குக்கடற்கரைச்சாலையில் சிவாஜி சிலை முன்பு சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. சுற்றிலும் குடியிருப்புகள் உள்ள நெருக்கமான இப்பகுதியில் நடுசாலையில் கார் வெடித்து தீப்பற்றி எறிவதுபோல் படமாக்கினர். அப்போது நள்ளிரவில் சாலைகளை மூடிய பட குழுவினர் மோட்டார் சைக்கிள்களை ஆங்காங்கே நிறுத்தினார்கள் பின்னர் காரை பயங்கர சத்தத்துடன் வெடிக்க செய்து தீ பற்றி எறிவது போன்று படமாக்கினர்.
இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், ”மக்கள் நெருக்கமான புதுச்சேரி பகுதிகளில் அபாயகர படப்பிடிப்புகளை நடத்த அரசு எப்படி அனுமதி தருகிறார்கள் என்பதே தெரியவில்லை. நள்ளிரவு நேரத்தில் சண்டைக்காட்சிகளால் மக்களுக்குதான் அதிகளவு பாதிப்பு மட்டுமல்ல பதற்றமும் ஏற்படுகிறது. இதை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்” என்கின்றனர்.