புனே: புனே சொகுசு கார் விபத்து வழக்கில் 17 வயது சிறுவனின் ரத்த பரிசோதனை முடிவுகளை திரித்ததாக இரு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 19-ம் தேதி அதிவேகமாக சொகுசு காரை இயக்கி இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறார் சீர்திருத்த முகாமில் உள்ளார்.
புனேவின் கல்யாணி நகர் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காரை இயக்கி, முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது சிறுவன் மோதினார். இதில் ஐடி ஊழியர்களான அனீஷ் அவாதியா (24), அஸ்வினி கோஸ்டா (24) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், அவரது தந்தை, தாத்தா அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். தற்போது மருத்துவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து புனே காவல் ஆணையர் அமிதேஷ் குமார் கூறுகையில், “சசூன் மருத்துவமனையின் மருத்துவர் அஜய் தவாரே, மருத்துவர் ஸ்ரீஹரி ஹர்னோர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சிறுவனின் ரத்தப் பரிசோதனை அறிக்கையை திரித்துள்ளனர்.” என்றார்.
நடந்தது என்ன?புனேவின் கல்யாணி நகர் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காரை இயக்கி, முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது சிறுவன் மோதினார். இதில் ஐடி ஊழியர்களான அனீஷ் அவாதியா (24), அஸ்வினி கோஸ்டா (24) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தை ஏற்படுத்திய சிறுவனை பொதுமக்கள் மடக்கி பிடித்து, காவலர்கள் வசம் ஒப்படைத்தனர். இருந்தும் அடுத்த 15 மணி நேரத்தில் அவருக்கு சிறார் நீதி வாரியம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த விவகாரம் சர்ச்சையானது. மக்களும், எதிர்க்கட்சியினரும் இது குறித்து விமர்சித்தனர்.
இந்த சூழலில் சிறுவனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிறுவனின் தந்தையும், தாத்தாவும் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனுக்கு மதுபானம் பரிமாறிய மதுபானக் கூட ஊழியர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இப்போது இரண்டு மருத்துவர்கள் கைதாகி உள்ளனர்.