புனே,
மராட்டிய மாநிலம் புனே நகரில் 17 வயது சிறுவன் மதுபோதையில் ஓட்டி வந்த சொகுசு கார் மோதியதில் இரண்டு ஐ.டி. ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக சொகுசு காரை ஓட்டிய சிறுவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவன் ஜாமீனில் உடனடியாக விடுவிக்கப்பட்டான்.
ஓட்டுனர் உரிமம் இல்லை என்று தெரிந்தும் சிறுவன் வசம் சொகுசு காரை கொடுத்த அவனது தந்தையும், ரியஸ் எஸ்டேட் அதிபருமான விஷால் அகர்வாலை போலீசார் கைது செய்தனர்.
இந்த விபத்தில் அந்த சிறுவனை காப்பாற்ற மறைமுக வேலைகள் நடைபெற்றன. ஆனால் உறவினர்கள், ஊடகங்கள் கடுமையாக எதிர்த்ததன் விளைவாக அந்த சிறுவனின் ஜாமின் ரத்து செய்யப்பட்டு சிறார் முகாமில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சிறுவனின் தாத்தாவை போலீசார் கைது செய்தனர். குடும்ப கார் டிரைவரை இந்த வழக்கில் சிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனின் தாத்தா மீது கடத்தல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக 2 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து புனே காவல் ஆணையர் அமிதேஷ் குமார் கூறுகையில், “சசூன் மருத்துவமனையின் மருத்துவர் அஜய் தவாரே, மருத்துவர் ஸ்ரீஹரி ஹர்னோர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சிறுவனின் ரத்தப் பரிசோதனை அறிக்கையை திரித்துள்ளனர்.” என்றார்.
முன்னதாக, சிறுவன் விபத்து தினத்தன்று இரவு 2 பார்களில் குடித்துவிட்டு வெளியே வந்த சி.சி.டி.வி. காட்சிகள் பதிவாகியுள்ளன. ஆனால் ரத்த பரிசோதனையில் இதுகுறித்து எந்த விவரமும் வெளியாகாத நிலையில், மருத்துவமனையில் போலீசார் நடத்திய விசாரணையில் மாதிரிகளை 2 மருத்துவர்கள் மாற்றிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் விசாரணையில், மருத்துவர் அஜய் என்பவர் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தந்தை அகர்வாலிடம் போனில் பேசி இருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.