பெண்ணின் வயிற்றில் பஞ்சு ரோலை வைத்து தைத்த மருத்துவர்கள்: ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

மதுரை: வயிற்று வலி சிகிச்சைக்கு வந்த பெண்ணின் கருப்பையை அனுமதியில்லாமல் அகற்றியதுடன், வயிற்றில் பஞ்சு ரோலை வைத்து தைத்தற்காக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க தனியார் மருத்துவர்களுக்கு மாநில நுகர்வோர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை கல்பாளையத்தான்பட்டியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண், தொடர் வயிற்று வலிக்காக அங்குள்ள தனியார் மருத்துவனைக்கு கடந்த 2016 மார்ச் 15-ல் சிகிச்சைக்கு சென்றார். அங்கு கர்ப்பப்பையில் நீர்கட்டி இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகும் அவருக்கு வயிறு வலி குறையவில்லை. இதனால் பெண்ணை உறவினர்கள் திருச்சி பெல் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்ட போது அவரது வயிற்றில் பஞ்சு ரோல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அறுவை சிகிச்சை முடிந்து வயிற்று பகுதியை தைக்கும் போது பஞ்சு ரோலை உள்ளே வைத்து தைத்துள்ளனர். மேலும் பெண்ணின் சம்மதம் இல்லாமல் கருப்பையும் அகற்றப்பட்டுள்ளது தெரியவந்தது. பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பெண்ணின் வயிற்றில் இருந்த பஞ்ச் ரோல் அகற்றப்பட்டது.

இதையடுத்து வயிற்றில் தவறுதலாக பஞ்சு ரோல் வைத்து தைத்த தனியார் மருத்துவமனை, மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அனுமதியில்லாமல் கருப்பையை அகற்றியதற்காகவும் ரூ.99 லட்சம் இழப்பீடு கோரி அப்பெண் மதுரையிலுள்ள மாநில நுகர்வோர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி கருப்பையா விசாரித்து பிறப்பித்த உத்தரவு: ‘தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அலட்சியமாக சிகிச்சை அளித்ததுடன் கவனக்குறைவாக நோயாளியின் உடலில் பஞ்சு ரோலை வைத்து தைத்து, நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் நடந்து கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் நோயாளியின் அனுமதியின்றி கருப்பையை அகற்றியதும் உறுதியானது. இதனால் மனுதாரரின் தாயாருக்கு ஒரு மாதத்தில் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தவறினால் இழப்பீட்டு தொகைக்கு ஆண்டுக்கு 6 சதவீத வட்டி வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.