2-வது உளவு செயற்கைக்கோள்..? வட கொரியாவின் ராக்கெட் திட்டத்திற்கு அண்டை நாடுகள் கண்டனம்

சியோல்:

வட கொரியா, தென் கொரியா நாடுகளுக்கிடையிலான மோதல் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா மேற்கொள்ளும் ஏவுகணை சோதனைகள், போர் ஒத்திகை போன்ற ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. தென் கொரியாவை கண்காணிக்கும் வகையில் கடந்த நவம்பர் மாதம் வட கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது.

இந்நிலையில், அடுத்த வாரம் ஒரு செயற்கைக்கோளை அனுப்ப உள்ளதாக வட கொரியா இன்று அறிவித்துள்ளது. 2019-க்கு பிறகு தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் மற்றும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் சீனப் பிரதமர் லி கியாங்கை சியோலில் சந்தித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இந்த அறிவிப்பை வடகொரியா வெளியிட்டுள்ளது. ஜப்பானுக்கு முறைப்படி தகவல் தெரிவித்துள்ளது.

கொரிய தீபகற்பம் மற்றும் சீனாவிற்கும், பிலிப்பைன்ஸ் தீவான லூசானுக்கு கிழக்கே இன்று முதல் ஜூன் 3-ம் தேதி நள்ளிரவு வரை கடற்பரப்பில் பாதுகாப்பு எச்சரிக்கையுடன் செயற்கைக்கோள் ராக்கெட் ஏவுவது குறித்து வட கொரியா அறிவித்திருப்பதாக ஜப்பான் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் முக்கிய எதிரி நாடுகளில் ஜப்பானும் ஒன்று. ஆனாலும், செயற்கைக்கோள் ஏவும் கடற்பகுதியை கண்காணித்து, கடல்சார் பாதுகாப்பு குறித்த தகவல்களை ஒருங்கிணைத்து வழங்குவதால் ஜப்பான் கடலோர காவல் படைக்கு, வட கொரியா முறைப்படி தனது திட்டத்தை தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் இந்த திட்டம், தனது இரண்டாவது ராணுவ உளவு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் வைக்கும் முயற்சியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வடகொரியாவின் வடமேற்கில் உள்ள டோங்சங்கிரி ஏவுதளத்தில் உளவு செயற்கைக்கோளை ஏவுவதற்கான சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளின் அறிகுறிகளைக் கண்டறிந்ததாக தென் கொரிய ராணுவம் சமீபத்தில் கூறியிருந்தது.

வட கொரியாவின் இந்த திட்டத்திற்கு அண்டை நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பான் தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயற்கைக்கோளை ஏவுவது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை நேரடியாக மீறும் செயல் என்றும், இது பிராந்தியம் மற்றும் உலகின் அமைதியையும் பாதுகாப்பையும் சீர்குலைக்கும் என்றும் இன்று நடந்த முத்தரப்பு சந்திப்பின்போது தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் தெரிவித்தார்.

ராக்கெட் ஏவும் திட்டத்தை ரத்து செய்யுமாறு வடகொரியாவை கடுமையாக வலியுறுத்துவதாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கூறினார். வட கொரியாவின் நட்பு நாடான சீனாவின் பிரதமர் லி கியாங், வட கொரியாவின் ராக்கெட் ஏவும் திட்டம் பற்றி எதையும் குறிப்பிட்டு பேசவில்லை.

ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் மூத்த தூதர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் அனுப்பும் திட்டத்தை ரத்து செய்யும்படி வட கொரியாவிடம் வலியுறுத்த மூவரும் ஒப்புக்கொண்டனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.