சென்னை: “3-வது முறையாக இன்னும் அதிகமான தொகுதிகளை பெற்று பாஜக ஆட்சி அமைப்பது உறுதி. 3-வது முறையாக பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். பாஜக மீது எந்தவித குறையும் இல்லை. எனவே வெற்றியைக் கொண்டாட தயாராகுங்கள்.” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது, 6-ம் கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் நிறைவடைந்தவுடன், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழகத்தில் தேர்தல் முடிவடைந்த போதிலும், மற்ற மாநிலங்களிலும் பாஜகவுக்கு ஆதரவாக அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டார்.
இந்த சூழ்நிலையில், தமிழக பாஜக சார்பில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்துக்கு, மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்தார். சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்து வரும் இந்தக் கூட்டத்தில் மாநில பொறுப்பாளர்கள், நாடாளுமன்ற தேர்தல் குழு, மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், பாஜக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் அண்ணாமலை பேசுகையில், “இண்டியா கூட்டணியின் தலைவர்கள் பிரதமர் கனவில் உள்ளனர். இந்த கனவு வருகிற ஜூன் 4ம் தேதி காலை 11 மணி வரை மட்டுமே இருக்கும்.
3வது முறையாக இன்னும் அதிகமான தொகுதிகளை பெற்று பாஜக ஆட்சி அமைப்பது உறுதி. 3வது முறையாக பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். பாஜக மீது எந்தவித குறையும் இல்லை. எனவே வெற்றியைக் கொண்டாட தயாராகுங்கள்.
இந்த முறை தென்னிந்தியாவில் மட்டுமே புதிய துவக்கமாக அதிகமான தொகுதிகளை வெல்வோம். ஜூன் 4ம் தேதிக்கு பிறகு வடக்கு, தெற்கு என்ற பேச்சே இருக்காது. தெலங்கானாவில் பாஜக 10 இடங்களில் வெல்வது உறுதி. ஜூன் 4ம் தேதி பாஜக அனைத்து பகுதிகளிலும் வெற்றிபெறுவதை பார்ப்பீர்கள்.” என்று பேசினார்.