`படித்தால் நல்ல வேலைக்குப் போகலாம்’ என்பது காலம் காலமாகச் சொல்லப்படும் அறிவுரை. ஆனால், கோவை மரக்கடையைச் சேர்ந்த சையம் இஸ்லம் என்ற சிறுவனின் கதை வேறு. கொரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் தலைகீழாக மாறிய லட்சக்கணக்கான குடும்பங்களில் சையமின் குடும்பமும் ஒன்று. வேலைக்குச் சென்றால் மட்டுமே குடும்பத்தை நடத்த முடியும், கிடைக்கும் நேரத்தில் முடிந்தால் படித்துக் கொள்ளலாம் என்கிற நிலை.
பேப்பர் போடுவது, உணவு டெலிவரி செய்வது, டிசைனிங் வேலை செய்வது என ஒரு நாளில் 8 மணிநேரம் வேலை… 7 மணி நேரம் படிப்புடன், 16 வயதில் குடும்பப் பொறுப்புகளுடன் ஓய்வில்லாமல் சுழன்று கொண்டிருக்கிறான். இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சமீபத்தில் வெளியான 10-ம் வகுப்புத் தேர்வில் 396/500 மதிப்பெண்கள் எடுத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளான்.
சையமின் அப்பா நஜ்முல் இஸ்லாம் கூறுகையில், “எனக்கு பூர்வீகம் மேற்கு வங்கம். வேலைக்காக 20 வருஷத்துக்கு முன்னாடி குடும்பத்தோட கோவை வந்துட்டோம். ஒரு நகைக் கடையில ஆசாரியா வேலை பார்த்துட்டு இருந்தேன். கொரோனாவுக்கு முன்னாடிவரை எங்க வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. நல்லா சம்பாதிச்சுட்டு இருந்தேன். என் ரெண்டு குழந்தைகளையும் மெட்ரிக்குலேஷன் ஸ்கூல்ல படிக்க வைச்சேன்.
எல்லாமே நல்லா போயிட்டு இருந்தப்ப, கொரோனா டைம்ல என் மனைவி திடீர்னு மூளை பக்கவாத நோயால பாதிக்கப்பட்டாங்க. உயிரை காப்பாத்தறதே கஷ்டம்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க. சேமிப்பு, நகை எல்லாத்தையும் வித்துதான் ட்ரீட்மென்ட் பார்த்தோம். அந்த நேரத்துல எனக்கு வேலையும் போயிடுச்சு. உடனே வேற வேலை கிடைக்கலை. என்ன பண்றதுனு தெரியாம, திரும்பி மேற்கு வங்கத்துக்கே போயிட்டோம். அங்கயும் வேலை கிடைக்கலை. பசங்களுக்கு ஆன்லைன் கிளாஸ் போயிட்டு இருந்துச்சு. ஃபீஸ் கட்டலைனு ஸ்கூல்ல இருந்து நிறுத்திட்டாங்க.
மனைவிக்கு மருந்து, பிசியோதெரபினு நிறைய செலவு வந்துட்டே இருந்துச்சு. கொஞ்ச நாள் சேமிப்பை வெச்சு ஓட்டினோம். மேற்கு வங்கத்துலயும் வருமானத்துக்கு எந்த வழியும் கிடைக்காததால, வேற வழியில்லாம, திரும்பியும் கோவைக்கே வந்துட்டோம்.
எனக்கு ரூ.20,000 சம்பளத்துல வேலை கிடைச்சது. நான் முன்னாடி வாங்கிட்டு இருந்த சம்பளத்துல இது 50% தான். அதுவும், மனைவியோட ட்ரீட்மென்டுக்கேதான் சரியா இருக்கும். வீட்டு வாடகை, சாப்பாடு, பசங்க படிப்புனு நிறைய செலவு இருந்துச்சு.” என்று மகனை பார்த்தார்.
சிறுவன் சையம் இஸ்லம், தன் நாள்கள் தலைகீழாக மாறியதை பகிர ஆரம்பித்தார். “கஷ்டம்னா என்னனே தெரியாத ஒரு வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருந்தேன். எனக்கு ஆர்மி, போலீஸ் டிபார்ட்மென்ட்ல சேர ஆசை. 8-ம் கிளாஸ் படிச்சப்போ, ஒரு சைபர் க்ரைம் மோசடி பத்தின செய்தி ரொம்ப பாதிச்சது. சைபர் செக்யூரிட்டி சம்பந்தமா படிக்க ஆசைப்பட்டேன். மெட்ரிக்ல இருந்தவரை நல்லா படிச்சேன். 1 அல்லது 2-வது ரேங்க்தான் எடுப்பேன்.
கொரோனாவுக்கு அப்புறம், குடும்பச் சூழ்நிலை காரணமா படிப்பை விட்டு, நான் வேலைக்குப் போய் வீட்டை பார்த்துட்டு, தங்கச்சியை மட்டும் படிக்க வைக்கலாம்னு முடிவு பண்ணினேன். ஒரு மொபைல் கடைல ரூ.4,000 சம்பளத்துல வேலைக்குச் சேர்ந்தேன். வேலை அதிகமா இருந்தாலும், சம்பளம் கம்மியா இருந்துச்சு. அந்த வேலைய விட்டுட்டு ரூ.6,000 சம்பளத்துல ஒரு சிக்கன் கடைல வேலைக்குச் சேர்ந்தேன். அந்தக் கடைக்கு ஒரு கவர்ன்மென்ட் ஸ்கூல் மாஸ்டர் வருவார். அவர் என் சூழ்நிலையை கேட்டு, தங்கச்சியோட படிப்பு தொடர உதவி பண்ணினார். அப்ப என்னோட டி.சி, மார்க்க்ஷீட் எல்லாம் பார்த்துட்டு, ஆர்.எஸ்.புரம் கார்ப்பரேஷன் ஸ்கூல்ல 9-ம் கிளாஸ் சேர்த்துவிட்டார்.
படிச்சுட்டே, நகை பட்டறைகளுக்கு கம்ப்யூட்டர்ல நகை டிசைன் பண்ணிக் கொடுக்கற வேலையில சேர்ந்தேன். என் குடும்பச் சூழ்நிலை தெரிஞ்சு டீச்சர்ஸ் சப்போர்ட் பண்ணினாங்க. ஸ்கூல் போயிட்டு, நைட் வேலை முடிஞ்சு வர்றதுக்கு நைட் 10 மணி, சில நேரம் மிட்நைட் 1 மணி கூட ஆகும். இப்ப அதுல வேலை கொஞ்சம் குறைஞ்சுடுச்சு. ஸ்கூல் ஃபிரெண்ட் மூலமா நியூஸ் பேப்பர் டெலிவரி பண்ற வேலை கிடைச்சது. காலைல 4.30 மணிக்கு எந்திருச்சு நியூஸ் பேப்பர் போட கிளம்பிடுவேன். அடுத்து, ஃபுட் டெலிவரி வேலை கிடைச்சது. சைக்கிள்ல போய் இந்த வேலைகள் எல்லாத்தையும் முடிச்சுட்டு வர 8 மணி ஆகிடும்.
அப்பறம் அவசர அவசரமா கிளம்பி ஸ்கூலுக்குப் போய்டுவேன். டைம் இருந்தா காலைல சாப்பிடுவேன். ஆனா, பல நாள் சாப்பிட முடியாது. அம்மாவுக்கு இப்படி இருக்கிறதுனால மதிய சாப்பாடும் சரியா செய்ய முடியாது. ஃபிரெண்ட்ஸ், அவங்களோட சாப்பாட்டை ஷேர் பண்ணுவாங்க. ஸ்கூல் முடிச்சுட்டு அப்படியே டிசைனிங் வேலைக்குப் போய்டுவேன். இத்தனை வேலை செஞ்சாதான் மாசம் ஒரு ரூ.5,000 கிடைக்கும்” என்று சொல்லும்போது, இஸ்லமின் கையைப் பிடித்தபடி தொடர்ந்தார் நஜ்முல்.
“முன்னாடி நான் நல்லாருந்தப்ப நிறைய பேருக்கு உதவிகள் பண்ணிருக்கேன். எங்களுக்கு இப்படி ஒரு சூழ்நிலை வரும்னு யோசிச்சே பார்க்கல. இப்பவும் நல்ல வேலை தேடிட்டே இருக்கேன். எதுவும் அமையல. என் மகனை நல்லா படிக்க வைச்சு வக்கீல் ஆக்கணும்னு ஆசைப்பட்டேன். எந்த ஒரு அப்பாவும், மகன் படிக்காம வேலைக்குப் போகறதை விரும்ப மாட்டாங்க. படிக்க நேரமே இல்லாம தொடர்ந்து வேலைக்குப் போயும், என் மகன் இவ்ளோ மார்க் எடுத்திருக்கிறது பெருமையா இருக்கு. அவனுக்கு நான் சப்போர்ட் பண்ண முடியலைனு வருத்தமா இருக்கு” என்றார் சோகமாக.
சையமின் அம்மா ரோகி அபேகம், “முன்னாடி வீட்ல எல்லா வேலையும் நான் பார்த்துப்பேன். நேரம் கெடைக்கறப்ப பூ கட்டி குடுப்பேன். இப்போ, ஒரு கை, ஒரு கால் வரலை. சமையல், பாத்திரம் கழுவறதுனு பையனும், பொண்ணும் பண்ணிக் கொடுப்பாங்க.
எனக்கு இப்படி பிரச்னை ஆனப்ப, சொந்தக்காரங்க கொஞ்சம் உதவி பண்ணினாங்க. ஒருகட்டத்துக்கு மேல அவங்க உதவிகள் நின்னுடுச்சு. அதனால, மகன் படிச்சுட்டே குடும்பப் பொறுப்புகளை எடுத்துட்டு ஓடத் தொடங்கிட்டான். இப்ப என் உடம்பைப் பத்திகூட கவலை இல்ல. அவன் நல்லா படிச்சு முன்னுக்கு வந்தா போதும்” என்கிற ரோகியின் முகத்தில், தன் உடல்நலனைவிட சையமின் நிலைப்பற்றிய வலி அதிகம் தென்பட்டது.
மீண்டும் தொடர்ந்த சையம், “ஆரம்பத்துல ரொம்ப டயர்டாகி சிலநாள் காலைல ஸ்கூல்ல கிளாஸ் நடக்கறப்பவே தூங்கிட்டேன். அப்ப டீச்சர்ஸ் சூழ்நிலையைக் கேட்டு, எனக்கு இன்னும் சப்போர்ட் பண்ணினாங்க. இருந்தாலும், ஸ்கூல் டைம்ல மட்டும்தான் படிக்க முடியும். பப்ளிக் எக்ஸாம் தொடங்கறப்ப திடீர்னு, ‘வீட்டு வாடகை கொடுக்கலை. உடனே காலி பண்ணுங்க. இல்லாட்டி பொருள்களை எடுத்து வெளிய வீசிடுவோம்’னு சொன்னாங்க. அப்பறம், பள்ளி வாசல் மூலமா இந்த வீட்டை பிடிச்சோம். விடிஞ்சா தமிழ் எக்ஸாம். முன்னாடி நாள் நைட் வீடு காலி பண்ணோம். இந்தச் சூழ்நிலையிலதான் எக்ஸாம் எழுதினேன். எங்க ஸ்கூல்ல நான் 4-வது ரேங்க்.
அறிவியல் பாடத்துல நான்தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட். இருந்தாலும் குடும்பத்தை யோசிச்சு படிக்க வேண்டாம், வேலைக்கு போகலாம்னு நினைச்சேன். ரிசல்டை பார்த்துட்டு நிறைய பேர் தொடர்ந்து படின்னு அட்வைஸ் பண்றாங்க. அதே ஸ்கூல்ல ப்ளஸ் ஒன் சேர்ந்துட்டேன்.
இப்ப அம்மா 40% குணமடைஞ்சிருக்காங்க. மருந்து, ஃபிசியோனு சராசரியா மாசம் ரூ.10,000 செலவாகுது. சூழ்நிலை தெரிஞ்சு சிலர் சப்போர்ட் பண்றோம்னு சொல்லியிருக்காங்க. ஒரு கையில குடும்பப் பொறுப்புகள், இன்னொரு கையில என் லட்சியம்.. ரெண்டுலயம் ஜெயிப்பேன்னு நம்பிக்கை இருக்கு” என்கிறார் தன்னம்பிக்கையுடன்.
வறுமை… வெல்லக்கூடியதே. மற்றவர்களின் உதவியும் கிடைக்கும்போது, அந்தப் பயணத்தின் தூரம் குறையும். சையம் இஸ்லம்க்கு கிடைக்கட்டும் உதவிகள், மாறட்டும் இக்குடும்பத்தின் நிலை.
வாசகர்களின் கவனத்துக்கு…
சையமுக்கு உதவ விருப்பம் தெரிவிக்கும் வாசகர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொண்டு வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.