Doctor Vikatan: சருமத்தில் உள்ள Sun tan-ஐ நீக்க வீட்டு சிகிச்சை உதவுமா?

Doctor Vikatan: என் வயது 28. தினமும் ஒரு மணி நேரம் பயணம் செய்து வேலைக்குச் செல்கிறேன். சன் ஸ்கிரீன் உபயோகித்தாலுமே என் சருமம் வெயில் பட்டு, கருத்துப் போகிறது. அப்படிக் கருத்துப்போன அடையாளம் முகத்தில் திட்டுத்திட்டாக (Sun tan) கறுப்பாகப் படிந்திருக்கிறது. அதை நிரந்தரமாகப் போக்க முடியுமா…. வீட்டிலேயே ஏதேனும் சிகிச்சைகள் செய்து சருமத்தை பழைய நிறத்துக்குக் கொண்டு வர முடியுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்.

கீதா அஷோக்

Sun tan வராமலிருக்க வேண்டும் என்றால், சன் ஸ்கிரீனை தேர்வுசெய்வதிலிருந்தே அதற்கான அக்கறை தொடங்க வேண்டும். சிலர் காலையில் தடவிக்கொண்டு செல்லும் சன்ஸ்கிரீனுடனேயே மாலை வரை இருப்பார்கள். ஆனால், அது போதாது. உதாரணத்துக்கு, சன் ஸ்கிரீனில் எஸ்பிஎஃப் (SPF) 15 எனக் குறிப்பிட்டிருந்தால், அதைத் தடவியதிலிருந்து 45 நிமிடங்கள்வரைதான் பாதுகாப்பு கொடுக்கும்.  அதன் பிறகு வெயிலின் தாக்கமானது சருமத்துக்குள் ஊடுருவ ஆரம்பிக்கும். எனவே, நாம் எத்தனை மணி நேரம் வெயிலில் இருக்கிறோம், எந்த ஊரில் இருக்கிறோம், எந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்பதைப் பொறுத்து, அதற்கேற்ப எஸ்பிஎஃப் (SPF) உள்ள சன் ஸ்கிரீனை தேர்வு செய்ய வேண்டும். வெயில் அதிகமுள்ள சூழலில் அதிக எஸ்பிஎஃப் உள்ள சன் ஸ்கிரீனை உபயோகிக்க வேண்டும். சன் ஸ்கிரீன் உபயோகித்தாலும் சருமம் கருத்துப் போக இதுதான் முக்கிய காரணம்.

வெயில் பட்டுக் கருத்துப்போன சருமம், அது நீண்டநாள் தாக்கத்தின் விளைவாக உருவாகியிருக்கும் பட்சத்தில், பிக்மென்ட்டேஷன் (pigmentation) எனும் பிரச்னையாக மாறும். அதாவது, வெயிலில் செல்லும்போது சருமத்துக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் செல்வது, நீண்ட நாள்கள் அப்படியே இருப்பதெல்லாம்  வாயைச் சுற்றி, நெற்றியைச் சுற்றி கரும்படலத்தை ஏற்படுத்தும். அந்த நிலைக்குச் செல்லாமல் தடுப்பதுதான் முக்கியம். ஒருவேளை அப்படி கரும்படலம் வந்துவிட்டால், வீட்டு சிகிச்சைகள் எல்லாம் உதவாது. பிரத்யேக சிகிச்சைகள் தேவைப்படும்.

வெயிலில் அலைந்துவிட்டு வந்ததும் அன்றைய தினமே செய்கிற சில சிகிச்சைகளால், சருமத்தில் ஏற்பட்ட கருமை உடனடியாக மறைந்துவிடும். அடுத்த நாள் காலையே சருமம் பளிச்சென இருக்கும். சன் ஸ்கிரீன் உபயோகிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், குடை உபயோகிப்பது, தொப்பி உபயோகிப்பது, ஸ்கார்ஃப் கட்டிக்கொள்வது போன்றவை கூடுதல் பலன்களைத் தரும். 

Sunscreen

மருந்துக் கடைகளில் கேலமைன் ஐபி லோஷன் (Calamine Lotion Ip) என கிடைக்கும். லாக்டோ கேலமைனையும் இதையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்.  வெயிலில் அலைந்துவிட்டு வந்த தினம் மாலை, கேலமைன் ஐ.பி லோஷனில் கால் டீஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளவும். அதில் ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா சேர்க்க வேண்டும். பேக்கிங் சோடா சேர்த்ததும் அந்தக் கலவை நுரைத்து வரும். அந்த நுரை அடங்குவதற்குள் அதை எடுத்து சருமத்தில் கருத்துப்போன இடங்களின்மேல் தடவ வேண்டும். முகம், கழுத்து, கை, கால்கள், முதுகு என எல்லா பகுதிகளிலும் இதைத் தடவலாம். நன்றாகக் காய்ந்த பிறகு துடைத்து எடுக்க வேண்டும். புளித்த தயிரை நன்கு அடித்துக்கொண்டு, அதில் ஓட்ஸை பொடித்துப் போட்டு, இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள்  சேர்த்துக் கலந்து முகத்தில் தடவவும்.

தினமும் கேலமைன் ஐபி லோஷனும், வார இறுதியில் தயிர்- ஓட்ஸ் பேக்கும் போட்டு வந்தால் வெயில் பட்டுக் கருத்துப்போன (Sun tan) சருமம் பழைய நிறத்துக்குத் திரும்பும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலத்துக்கு சருமத்தின் நிறத்தை ஒரு ஷேடு லைட்டாக மாற்றும் தன்மை உண்டு. இவை தவிர, ‘இன்ஹிபிஷன் தெரபி’ (Inhibition Therapy) என  ஒரு சிகிச்சை உண்டு. இதை சருமநல மருத்துவர்கள் மற்றும் சரும சிகிச்சை நிபுணர்களிடம் செய்து கொள்வதும் பலனளிக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.