IPL 2024: இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் யார் யார் ? – முழு விவரம்

IPL 2024 Recap: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நேற்றோடு நிறைவடைந்தது. மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய இந்த கிரிக்கெட் திருவிழா கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்றது. 10 அணிகள் மோதிய இந்த தொடரில் 70 லீக் சுற்று போட்டிகள், 4 பிளே ஆப் சுற்று போட்டிகள் என மொத்தம் 74 போட்டிகள் நடைபெற்றது. தொடரின் ஆரம்பத்தில் இருந்தே பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் ஆதிக்கம் செலுத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2024 ஐபிஎல் சீசனின் சாம்பியன் பட்டத்தை வென்றது. 

இது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மூன்றாவது ஐபிஎல் கோப்பையாகும். 2012 மற்றும் 2014 சீசனுக்கு பின் 10 ஆண்டுகள் கழித்து கொல்கத்தா அணி சாம்பியனாகி உள்ளது. குறிப்பாக, நேற்றைய இறுதிப்போட்டி நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் கொல்கத்தா அணி முதல்முறையாக 2012ஆம் ஆண்டில் கோப்பையை கைப்பற்றியது. தற்போது அதே மைதானத்தில் 12 ஆண்டுகள் கழித்து கோப்பையை வென்றிருக்கிறது. 

சிறந்த வீரர்…

2012ஆம் ஆண்டில் கம்பீர் கேப்டனாக இருந்த நிலையில், சுனில் நரைன் இளம் பந்துவீச்சாளராக இருந்தார். தற்போது கம்பீர் கொல்கத்தா அணியின் ஆலோசகராக இருக்கும் நிலையில், சுனில் நரைன் ஒரு மூத்த பந்துவீச்சாளராக இருந்து கோப்பையை வெல்ல ஒரு முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும், சுனில் நரைன் 2024 ஐபிஎல் சீசனின் மிகுந்த மதிப்பு வாய்ந்த வீரர் என்ற விருதையும் கைப்பற்றியுள்ளார். சுனில் நரைன் இந்த விருதை மூன்றாவது முறையாக பெறுகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், 2024 ஐபிஎல் சீசன் நிறைவு விழாவில் யார் யாருக்கு என்னென்ன விருதுகள் வழங்கப்பட்டன, அதன் பரிசுத்தொகை என்ன ஆகிய விவரங்களை இங்கு காணலாம்.

2024 ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ரூ.20 கோடியும், இரண்டாம் இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ரூ.12.50 கோடியும் பெற்றன. அதேபோல், மூன்றாவது இடம் பிடித்த ராஜஸ்தான் அணி ரூ.7 கோடியும், பெங்களூரு அணி 6.5 கோடியும் பெற்றன. குறிப்பாக இந்த சீசனில் மொத்தம் ரூ.46.5 கோடிக்கு பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டன. 

விருதுகளும் பரிசுகளும்…

– 2024 ஐபிஎல் சீசனில் அதிக ரன்களை அடித்து Orange Cap விருதை பெற்ற ஆர்சிபி வீரர் விராட் கோலிக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. அவர் மொத்தம் 741 ரன்களை இந்த தொடரில் குவித்தார். இந்த விருதை இரண்டாவது முறையாக வெல்கிறார். அந்த வகையில் இந்த விருதை இரண்டு முறை வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

– 2024 ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி Purple Cap விருதை வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் ஹர்ஷல் படேலுக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை அளிக்கப்பட்டது. அவர் இந்த சீசனில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவர் இரண்டாவது முறையாக இந்த விருதை பெறுகிறார். 2021 சீசனில் ஆர்சிபி அணிக்காக 32 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹர்ஷல் படேல் அப்போது Purple Cap விருதை வென்றார்.  

– 2024 ஐபிஎல் சீசனில் மிகுந்த மதிப்பு வாய்ந்த வீரருக்கு வழங்கப்படும் Most Valuable Player விருதை வென்ற கேகேஆர் வீரர் சுனில் நரைனுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. இதற்கு இந்த விருதை 2012 மற்றும் 2018 சீசனில் சுனில் நரைன் வென்றது குறிப்பிடத்தக்கது. 

– 2024 ஐபிஎல் சீசனில் அதிக பேன்ட்ஸி புள்ளிகள் பெற்று Ultimate Fantasy Player Of The Season விருதை கேகேஆர் வீரர் சுனில் நரைன் வென்றார். அவருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. 

– 2024 ஐபிஎல் சீசனில் சிறப்பாக செயல்பட்ட வளர்ந்து வரும் இளம் வீரருக்கு வழங்கப்படும் Emerging Player Of The Season விருதை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் நிதிஷ் குமார் ரெட்டி வென்றார். இவருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. இந்த சீசனில் இவர் 13 போட்டிகளில் விளையாடி 303 ரன்களை அடித்துள்ளார். இதில் 2 அரைசதங்கள் அடக்கம். பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். 

– 2024 ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்களை அடித்து Most Sixes விருதை சன்ரைசர்ஸை ஹைதராபாத் அணி வீரர் அபிஷேக் சர்மா வென்றார். அவருக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது. அவர் மொத்தம் 42 சிக்ஸர்களை அடித்துள்ளார். 

– 2024 ஐபிஎல் சீசனில் அதிக பவுண்டரிகளை அடித்து Most Fours விருதை சன்ரைசர்ஸை ஹைதராபாத் அணி வீரர் டிராவிஸ் ஹெட் வென்றார். அவருக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது. அவர் மொத்தம் 64 பவுண்டரிகளை அடித்துள்ளார். 

– 2024 ஐபிஎல் சீசனில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்து Best Strike Rate விருதை டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் பிரேசர் மெக்கர்க் வென்றார். அவருக்கும் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. இந்த சீசனில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 234.04 ஆகும். அவர் 9 போட்டிகளில் விளையாடி 330 ரன்களை குவித்துள்ளார். இதில் 4 அரைசதங்கள் அடக்கம். குறிப்பாக அவர் 32 பவுண்டரிகளையும், 28 சிக்ஸர்களையும் அடித்துள்ளார். அதாவது இவர் அடித்த மொத்தம் 330 ரன்களில் 296 ரன்கள் பவுண்டரிகளிலேயே வந்துள்ளது. வெறும் 34 ரன்களை மட்டுமே 9 போட்டிகளில் பவுண்டரிகள் இல்லாமல் அடித்துள்ளார்.

– 2024 ஐபிஎல் சீசனில் சிறந்த கேட்சை பிடித்து Catch Of The Season விருதை கொல்கத்தா அணி வீரர் ரமன்தீப் சிங் வென்றார். அவருக்கு ரூ.10 லட்சம் விருது வழங்கப்பட்டது. 

– 2024 ஐபிஎல் சீசனில் மிகவும் கண்ணியமாக விளையாடிய அணிக்கு வழங்கப்படும் Fair Play விருதை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றது. அந்த அணிக்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. 

– 2024 ஐபிஎல் சீசனில் சிறந்த ஆடுகளம் மற்றும் மைதான பராமரிப்புக்கு வழங்கப்படும் Pitch and Ground விருதை ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானம் வென்றது. இதற்கு ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.