Samsung Galaxy F55 5G Features And Price: உலகில் அதிக ஸ்மார்ட்போன் பயனர்கள் கொண்ட நாடுகளின் பட்டியில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடிக்கிறது. அந்தளவிற்கு இந்திய ஸ்மார்ட்போன் சந்தை என்பது பெரியதாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வயது, வர்க்க வித்தியாசமின்றி அனைவருமே ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதே ஆகும். இங்கு ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியையும் கண்டிப்பாக குறிப்பிட்டே ஆக வேண்டும்.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் தயாரிப்புகளே முன்னணி வகிக்கின்றன. ஆப்பிள் ஐபோன் பிரீமியம் வகை ஸ்மார்ட்போன்களையே தயாரிக்கின்றன. ஆப்பிள் ஐபோனுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால், பிரீமியம் மற்றும் மற்ற வகை ஸ்மார்ட்போன் தயாரிப்புகளை கொண்ட சாம்சங்கிற்கு ஆப்பிளை விட அதிக வரவேற்பு இருப்பதற்கு அது அனைத்து தரப்பு மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது என்பதால்தான்.
சாம்சங்கின் புதிய ஸ்மார்ட்போன்
இந்தியாவில் சாம்சங்கின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அவர்களின் தயாரிப்புகளில் காணப்படும் நிகரற்ற தரம் எனலாம். ஒரு மொபைலை வாங்கினால் அது எவ்வித பிரச்னையும் இன்றி மூன்றாண்டுகளுக்கு மேல் உழைப்பதாக பொதுவாக சாம்சங் தயாரிப்புகள் மீது நல்ல பெயர் உள்ளது. எனவேதான், பிரீமியம் வகை சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கும் சரி, குறைந்த விலையில் வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கும் சரி நல்ல வரவேற்பு இருக்கிறது.
அந்த வகையில், சாம்சங் நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போனை இன்று விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. சாம்சங் அதன் F சீரிஸில் புதிய மாடலாக Samsung Galaxy F55 5G மொபைலை கொண்டுவந்திருக்கிறது. அதன் F சீரிஸில் Samsung Galaxy F15, Samsung Galaxy F34, Samsung Galaxy F54 ஆகியவை குறிப்பிடத்தகுந்த ஒன்று. இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போனுக்கான தேவை அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு சாம்சங் இந்த ஸ்மார்ட்போனை 5ஜிக்கு ஏற்றவாறு கொண்டுவந்திருக்கிறது.
இந்நிலையில், Samsung Galaxy F55 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள கேமரா, பிராஸஸர், பேட்டரி உள்ளிட்ட முக்கிய அம்சங்கள்; இதன் வேரியண்ட்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் ஆகியவற்றை இங்கு தொடர்ந்து காணலாம்.
சாம்சங்கின் உத்தரவாதங்கள்
Samsung Galaxy F55 ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் சூப்பர் AMOLED டிப்ஸ்ப்ளே உடனும், திரை ரெஸ்சோல்யூஷன் 1080×2400 பிக்ஸல்களுடனும், திரை ரெப்ரேஷ் ரேட் 120Hz உடனும் வருகிறது. இதன் பின்புறம் லெதர் பினிஷிங் கொடுக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, இந்த ஸ்மார்ட்போன் Qualcomm நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 7 Gen 1 சிப்செட் உடன் வருகிறது. இதில் 12ஜிபி வரை RAM மற்றும் 256ஜிபி வரை இன்டர்நல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், உங்களுக்கு அதிக ஸ்டோரேஜ் வேண்டுமென்றால் மெமரி கார்ட் மூலம் 1TB வரை நீட்டித்துக்கொள்ளலாம். குறிப்பாக அடுத்த நான்கு தலைமுறை ஆண்ட்ராய்ட் அப்கிரேடுக்கும், ஐந்து தலைமுறை பாதுகாப்பு அப்கிரேடுக்குமான உத்தரவாதத்தை சாம்சங் வழங்குகிறது.
கேமரா மற்றும் பிற வசதிகள்
இதில் மூன்று பின்புற கேமரா அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. அடிப்படை கேமரா சென்சார் 50MP ஆகும். 10X டிஜிட்டல் Zoom வசதி இதில் உள்ளது. மேலும், பின்புற கேமராவில் மீதம் இரண்டு 8MP மற்றும் 2MP வசதியுடன் வருகிறது. மேலும் முன்பக்க செல்ஃபி கேமரா 50MP வசதியுடன் வருகிறது. மேலும், இதில் 5,000mAh பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. 45W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் டிஸ்ப்ளேவிலேயே fingerprint வசதி, வாய்ஸ் போக்கஸ் வசதி, Knox Sercurity வசதி என பல கூடுதல் வசதிகளும் இதில் உள்ளன.
விலையும், விற்பனையும்…
Samsung Galaxy F55 5G ஸ்மார்ட்போன் மூன்று வேரியண்ட்களில் வருகிறது. 8ஜிபி + 128ஜிபி வேரியண்ட் 26 ஆயிரத்து 999 ரூபாய்க்கும், 8ஜிபி + 256ஜிபி வேரியண்ட் 29 ஆயிரத்து 999 ரூபாய்க்கும், 12ஜிபி + 256ஜிபி வேரியண்ட் 32 ஆயிரத்து 999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வருகிறது. இது Apricot Crush மற்றும் Raisin Black ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன. இதனை நீங்கள் பிளிப்கார்ட் தளத்திலும், சாம்சங் இந்தியாவின் அதிகாரப்பூர்வ தளத்திலும் இன்று (மே 27) இரவு 7 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.