நியூயார்க்: ரஃபா நகரில் அமைந்துள்ள தற்காலிக முகாம்கள் மீது நேற்று முன்தினம் (மே 26) இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதில் சுமார் 45 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு தனது கடுமையான கண்டனத்தை ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது. “இந்த கொடூர மோதலில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் வகையில் தஞ்சம் புகுந்த அப்பாவி மக்களின் உயிரை பலி வாங்கிய இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடவடிக்கையை நான் கடுமையாக கண்டிக்கிறேன். காசாவில் பாதுகாப்பான இடம் ஏதும் இல்லை. இந்தக் கொடூரம் நிறுத்தப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ரஃபா தற்காலிக முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தவறானது என்றும். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார். இருந்தும் இந்த தாக்குதலில் ஹமாஸின் இரண்டு மூத்த நிர்வாகிகளை கொன்றதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
“ரஃபாவில் ஞாயிற்றுக்கிழமை அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மூலம் காசாவில் பாதுகாப்பான இடம் என்று எதுவும் இல்லை என தெரிகிறது. ரஃபாவில் தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து வரும் படங்கள் கவலை அளிக்கும் வகையில் உள்ளது.
இஸ்ரேல் தனது போர் உத்தியை மாற்றிக் கொள்ளவே இல்லை. மீண்டும் மீண்டும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த மக்களை காக்கும் வகையிலான நடவடிக்கையை இஸ்ரேல் எடுத்தாக வேண்டும்” என ஐ.நா மனித உரிமைகள் உயர்மட்ட குழுவின் ஆணையர் டர்க் தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் வசம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் ஹமாஸ் உடனடியாக விடுவிக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் நேற்று முன்தினம் (மே 26) குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 249 பேர் காயமடைந்துள்ளதாக காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இந்தத் தாக்குதல் சர்வதேச அளவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் வாசிக்க>> தெற்கு காசாவின் ரஃபா நகரம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 45 பேர் உயிரிழப்பு
I condemn Israel’s actions which killed scores of innocent civilians who were only seeking shelter from this deadly conflict.
There is no safe place in Gaza.
This horror must stop.