Gautam Gambhir ICT Head Coach Speculations: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2024ஆம் ஆண்டின் ஐபிஎல் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றி, 2012 மற்றும் 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளை தொடர்ந்து மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது. ஐபிஎல் சீசன் இப்போது முடிந்துவிட்டாலும், கேகேஆர் அணி இப்போது கிரிக்கெட் குறித்த பேச்சில் அடிபடுவதற்கு முக்கிய காரணம், அந்த அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் எனலாம்.
வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் இந்திய ஆடவர் சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலியாகிறது. தற்போது தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட் இந்த முறை இந்த பதவிக்கு விண்ணப்பிக்காத நிலையில் புதிய பயிற்சியாளர் இந்திய அணியில் பதவியேற்கப்போவது மட்டும் உறுதியானது. நேற்றுதான் அந்த பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதியாகும். நேற்று வரை எந்தவித முன்னணி வெளிநாட்டு பயிற்சியாளர்களோ, வீரர்களோ விண்ணப்பிக்கவில்லை என கூறப்படுகிறது.
அடிபட்ட பல பெயர்கள்
ராகுல் டிராவிட் மட்டுமின்றி தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கும் விவிஎஸ் லட்சுமணும் விண்ணப்பிக்கவில்லை என உறுதியாக கூறப்படுகிறது. அதேபோல், ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கர், ஸ்டீபன் பிளமிங் என பல பெயர்கள் இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானாலும், அவர்கள் அதனை மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், நேற்றோடு விண்ணப்பிக்கும் தேதி நிறைவடைந்த நிலையில் பிசிசிஐ சுமார் 3000க்கும் மேற்பட்ட போலி விண்ணப்பங்களை பெற்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் பெயரில் போலியாக தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்படி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் குறித்த பேச்சுகள் பரபரப்பாகி வரும் வேளையில் தற்போது மற்றொரு புதிய தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது.
கம்பீர் நியமனம்?
அதாவது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருக்கும் கௌதம் கம்பீர் விரைவில் பயிற்சியாளராக அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கௌதம் கம்பீர் கடந்த காலங்களில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்ட நிலையில், கேகேஆர் அணி உரிமையாளர் ஷாருக் கான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கம்பீர் மீண்டும் அந்த அணிக்கு இந்த சீசனில் வந்ததாக தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர் அதற்கு முன் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வந்தார்.
இப்படி பல்துறை வித்தகராக அறியிப்படும் கௌதம் கம்பீர் 2019 – 2024 வரை பாஜகவை சேர்ந்த மக்களவை உறுப்பினராகவும் செயல்பட்டார். இருப்பினும், கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த முறை தேர்தலில் போட்டியிடாமல், தீவிர அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்திருந்தார். எனவே, தலைமை பயிற்சியாளர் பதவிக்கான காலியிடம் குறித்த அறிவிப்பு வெளியான போதே கம்பீர் பெயரும் அடிபட தொடங்கியது, கேகேஆர் அணி கோப்பையை வென்ற பின்னர் அந்த பேச்சு இன்னும் பலமாகிவிட்டது.
இந்நிலையில், கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுவிட்டதாகவும், அதன் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் பிசிசிஐயின் தலைமையுடன் நெருக்கம் காட்டும் ஒரு பெரிய ஐபிஎல் அணியின் உரிமையாளர் ஒருவர் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. கம்பீரை இந்த பதவியில் நியமிக்க பிசிசிஐ பல பேச்சுவார்த்தைகளை நடத்தி அவரை ஒப்புக்கொள்ள வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.