சென்னை,
கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் சமீபத்தில் நடந்த கேண்டிடேட் செஸ் போட்டியில் 17 வயதான சென்னை கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இதன் மூலம் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரனுடன் அவர் மோதுகிறார். இதன் மூலம் உலக போட்டியில் விளையாடும் இளம் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
குகேஷ் – டிங் லிரன் மோதும் உலக செஸ் போட்டி நவம்பரில் நடக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு செஸ் சங்கம் மற்றும் ரஷிய அறிவியல் கலாச்சார மையம் சார்பில் டி.குகேசுக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது. இந்தியா ஒலிம்பிக் சங்கத்தின் மூத்த துணை தலைவர் அஜய் படேல், சர்வதேச செஸ் சம்மேளன துணைத் தலைவர் டி.வி. சுந்தர், தமிழ்நாடு செஸ் சங்க தலைவர் எம்.மாணிக்கம், அகில இந்திய செஸ் சம்மேளன முன்னாள் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், வேலம்மாள் கல்வி நிறுவனத்தை சேர்ந்த எம்.வி.எம்.வேல்மோகன், இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டரான மானுவேல் ஆரோன், தமிழ்நாடு செஸ் சங்கபொதுச் செயலாளர் பி.ஸ்டீபன் பாலசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்று டி.குகேஷை பாராட்டினர்.
இந்த பாராட்டுக்கு நன்றி தெரிவித்து டி.குகேஷ் பேசும்போது, சீன வீரர் டிங் லிரனுடன் மோதும் உலக செஸ் போட்டியில் எனது சிறந்த நிலையை வெளிப்படுத்த முயற்சிப்பேன் என்றார். ஜூன் 25 முதல் ஜூலை 5 வரை ருமேனியாவில் நடைபெறும் செஸ் போட்டியில் டி.குகேஷ் பங்கேற்பார் என்று எதிர்பாக்கப்படுகிறது.