நாடாளுமன்றத்தில் கடந்த காலங்களில் சில முக்கியமான மசோதாக்களில், பிஜு ஜனதா தளத்தின் ஆதரவைப் பெற்ற மத்திய பா.ஜ.க, தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அதே கட்சியைக் கடுமையாக எதிர்த்துவருகிறது. குறிப்பாக, நாடாளுமன்றத் தேர்தலோடு ஒடிசாவில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுவதால் மாநிலத்திலும் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க முயற்சித்து வருகிறது. ஆனால், இந்த முயற்சியில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை விடவும் அவரின் வலதுகரமாகக் கருதப்படும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியனை பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் குறிவைத்து வருகின்றனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒடிசாவின் பூரி ஜெகந்நாத் கோயிலுக்குச் சென்றுவிட்டு பிரசாரத்தில் ஈடுபட்ட மோடி, ஆறு வருடங்களுக்கு முன் காணாமல் போன பூரி ஜெகந்நாத் கோயிலின் கருவூல அறையின் சாவி தமிழ்நாட்டுக்குச் சென்றுவிட்டதாக வி.கே.பாண்டியனைக் குறிவைத்து குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைத்தார். அதேபோல், தமிழரை முதல்வராக்க நவீன் பட்நாயக் முயற்சிப்பதாகவும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒடிசாவைச் சேர்ந்த நபரை முதல்வராக்குவோம் என அமித் ஷா கூறியிருந்தார்.
இவ்வாறு, நாட்டின் உயர்ந்த பதவியிலிருக்கும் இருவர் ஒடிசா தேர்தல் பிரசாரங்களில் ஒடிசா மக்கள் Vs தமிழர் என வேற்றுமையுணர்வை தூண்டும் வகையில் பேசிவருவதாக அரசியல் அரங்கில் விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில், அமித் ஷா மீண்டும் அதே தொனியில் ஒடிசாவில் தமிழர் முதல்வராவதைச் சகித்துக்கொள்ள மாட்டோம் என்று கூறியிருக்கிறார்.
ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்திலுள்ள சந்த்பாலியில் இன்று நடைபெற்ற பிரசாரத்தில் உரையாற்றிய அமித் ஷா, “ஒடிசா மக்கள் தங்கள் சாம்ராட் அசோகருக்கு எதிராக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து வீரத்துடன் போராடினார்கள். இன்று அதே ஒடிசா மக்கள் மீது தமிழ் முதல்வரை நவீன் பட்நாயக் திணிக்க முயல்கிறார்.
நவீன் பட்நாயக்கை ஒடிசா மக்கள் சகித்துக்கொண்டார்கள். ஆனால், அவரின் பெயரில் ஒரு தமிழரை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். ஒடிசாவின் பெருமைக்கான தேர்தல் இது. ஒரு தமிழர் திரை மறைவிலிருந்து அரசை வழிநடத்த நீங்கள் அனுமதிக்கப்போகிறீர்களா… பூரி ஜெகந்நாத் கோயிலின் கருவூல அறைக்கு போலி சாவி தயாரிக்கப்பட்டிருக்கிறது. எதற்காகப் போலி சாவி… விசாரணை அறிக்கையை ஏன் பகிரங்கப்படுத்தவில்லை என்பதற்கு நவீன் பட்நாயக் பதிலளிக்க வேண்டும். பிஜு ஜனதா தளம் அரசு யாரைப் பாதுகாக்க முயல்கிறது” என்று கேள்வியெழுப்பினார்.