விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் ஆனந்த் தேவரகொண்டா தெலுங்கு சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
கடந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளியான காதல் திரைப்படமான ‘Baby’ தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது உதய் ஷெட்டி இயக்கத்தில் ‘Gam Gam Ganesha’ எனும் படத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படம் மே 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஆனந்த் தேவரகொண்டா, சென்சார் போர்டு குறித்தும் சினிமா கலாசார சீரழிவை ஏற்படுத்துகிறது என்ற விமர்சனம் குறித்தும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
“மக்கள் வாழ்விலிருந்து ஏற்படும் தாக்கத்தால் சினிமா உருவாகிறது. அதே சமயம் மக்களின் வாழ்க்கையிலும் சினிமா தாக்கத்தை ஏற்படுகிறது. இது இரண்டையுமே பிரித்துப் பார்க்க முடியாது. மக்கள் சினிமாவைப் பார்த்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். பழக்க வழக்கங்கள், குணங்களில் எல்லாம் சினிமா தாக்கத்தை ஏற்படுத்துவது உண்மைதான். அதேசமயம், மக்களின் வாழ்க்கையைத்தான் சினிமா பிரதிபலிக்கிறது. அப்படியிருக்கையில், சினிமாவால் கலாசார சீரழிவு ஏற்படுகிறது என்பது நியாயமான குற்றச்சாட்டு இல்லை.
ஒவ்வொரு இயக்குநருக்கும், நடிகருக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது. அதை உணர்ந்து அவர்கள் படமெடுக்க வேண்டியது அவசியம். ஹாலிவுட்டில் வெளியான ‘ஜோக்கர்’ திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம். அப்படத்தில் வன்முறை, துப்பாக்கிச் சூடுகள் எல்லாம் அதிகமாக இருப்பதால் அப்படம், அமெரிக்காவில் வன்முறையான கலாசாரத்தை ஏற்படுத்துகிறது என்று கூறி படத்தைத் தடை செய்வது சரியா? கலாசார சீரழிவு என்ற அடிப்படையில் படத்தை சென்சார்ஷிப் செய்வது சரியானதல்ல. கலாசார சீரழிவிற்கு சென்சார்ஷிப் தீர்வாகாது” என்று பேசியிருக்கிறார்.