கோவை: ‘ஆவின் நிர்வாகத்தை சீரமைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, பாஜக தேசிய மகளிரணி தலைவியும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (மே 28) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள ஆவின் பாலகம், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துச் செல்லும் கொடிவேரி அணை பகுதியில் உள்ள ஆவின் பாலகம் உள்ளிட்ட பாலகங்களுக்கு, ஈரோடு மாவட்டம், சித்தோடு ஆவின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஆவின் பிஸ்கெட்டுகள் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட பகுதிகளில் காலாவதியான பிஸ்கெட் விற்பனை செய்யப்படுவதாக கொடிவேரி அணை, பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள், மாவட்ட உணவு கட்டுபாட்டு அலுவலர் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு இணைய வழியில் புகார் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் சித்தோடு ஆவின் தலைமை அலுவலகத்தில் இருந்து பிஸ்கெட் பாக்கெட்களை ஏற்றி வந்த ஆவின் வாகனத்தை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அந்த வாகனத்திலிருந்து காலாவதியான பிஸ்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஆவின் நிறுவனத்துக்கு மக்களிடம் மிகவும் நல்ல பெயர் உள்ளது. காலாவதியான பிஸ்கெட் பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகமாகும். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது, ஆவின் நிர்வாகமும், பால்வளத்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவின் நிர்வாகத்தை சீரமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவர் கூறியுள்ளார்.