கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதில், 1.30 மணி நேரத்தில் 98.4 மி.மீ மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கத்துக்கு மாறாக ஒருநாள் முன்னதாக மே 31=ம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், 2024-ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கேரள மாநிலம் கோட்டயம், திருவனந்தபுரம், கொச்சி முதலான பகுதிகளில் பலத்த மழைப் பொழிவு குறித்த எச்சரிக்கையும் விடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொச்சியில் இன்று மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதில், கொச்சி பல்கலைக்கழக பகுதியில் 1.30 மணி நேரத்தில் 98.4 மி.மீ மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. மேலும், எர்ணாகுளம் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் காலை 8.30-க்கு தொடங்கிய மழை சுமார் 4 மணிநேரம் பெய்தது. இந்த கனமழையால் கொச்சி நகரின் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழை காரணமாக ஃபோர்ட் கொச்சி பகுதியில் கேரள அரசுப் பேருந்து ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் காயம் அடைந்தார். கண்ணமாலி பகுதியில் ஓடையை கடக்க முயன்ற போது வெள்ளநீர் மூவரை அடித்துச் சென்றுள்ளது. கொச்சி, அங்கமாலி முதலான இடங்களில் பலத்த மழையால் சாலையில் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். சாலை போக்குவரத்தும் நத்தை வேகத்தில் நகர்ந்து வருகிறது.
மீண்டும் எச்சரிக்கை: இந்திய வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், “கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் 204 மி.மீ மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளது. இது தவிர பத்தினம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மற்ற சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை மையம்.