நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு பா.ஜ.க-வுக்கு அதிரடி சவால்களை விடுத்திருந்த நிலையில், அது குறித்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்திருப்பது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 24-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த சீமான் “தனித்து நிற்க பா.ஜ.க-வுக்கு துணிவு இருக்கா? ஜூன் 4-ம் தேதி பா.ஜ.க பெறப்போகும் வாக்குகள் எவ்வளவு எனத் தெரிந்துவிடும். கூட்டணியாக இல்லாமல் தனித்த பா.ஜ.க-வின் வாக்கு விழுக்காடு நாம் தமிழர் கட்சியைவிட அதிகமாக இருந்தால் கட்சியை கலைத்துவிட்டு செல்கிறேன்” என சவால்விட்டார்.
இதற்கு பா.ஜ.க தரப்பில் `சீமான் எப்போது பார்த்தால் `தனித்து போட்டி, தனித்து போட்டி’ என பொங்குகிறார். ஆனால் தமிழ்நாட்டின் அரசியல் பல்ஸ், கூட்டணி அமைத்து போட்டியிடுவதுதான். நான்கு பொதுத் தேர்தலை சந்தித்தபோதும் இது அவருக்கு புரியவில்லை” என சாடினர்.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்த பா.ஜ.க-வின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “திராவிடக் கட்சிகள் இல்லாத கூட்டணியை அமைத்திருக்கிறோம், கூட்டணிக்கு 21 இடங்களை விட்டுக் கொடுத்துவிட்டு 19 இடங்களில் பா.ஜ.க நின்றது. கூடுதலாக 4 இடங்களில் பா.ஜ.க சின்னத்தில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன.

தாமரை சின்னத்தில் பா.ஜ.க கூட்டணி போட்டியிடும் 23 தொகுதிகளில் நாங்கள் பெறும் வாக்குகளுக்கு பக்கத்தில் நாம் தமிழர் கட்சி வரட்டும், குறைந்தபட்சம் அந்தந்த தொகுதிகளில் எங்களின் வாக்குகளில் மைனஸ் 50 விழுக்காடு வாக்கையாவது சீமான் பெறட்டுமே, பார்ப்போம்” என்றவர். தொடர்ந்து “சீமான் கட்சி நடத்துகிறார் நன்றாக இருக்கட்டும். அவர் கட்சியை கலையுங்கள் என நான் சொல்லவில்லை. அவர்மீது மரியாதை இருக்கிறது. தமிழகத்தில் சீமானின் குரல் முக்கியமானது. எனவே இந்த விதண்டா வாதத்துக்கு நான் வரவில்லை. தேவையில்லாமல் அவர் ஏன் இந்த போட்டிக்கு வருகிறார் எனத் தெரியவில்லை” என முடித்துவைத்தார்.
எனினும் இந்த மோதல் சமூக வலைதளங்களில் தொண்டர்கள் இடையே தொடர்கிறது.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88