டெல்லி – வாராணசி இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் இருந்து வாராணசி செல்ல இருந்த இண்டிகோ விமானத்துக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதையடுத்து அதில் இருந்த பயணிகள் அவசரகால கதவு வழியாக வெளியேறினர். விமானத்தில் சோதனை மேற்கொள்ள ஏதுவாக தனிமைப்படுத்தப்பட்டது.

இந்த விமானம் காலை 5.35 மணிக்கு புறப்பட இருந்தது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பயணிகள் அதிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனை விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். அவசரகால கதவு வழியாக பயணிகள் வெளியேறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. இதில் 176 பயணிகள் இருந்தனர்.

அந்த விமானத்தை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டதாக தகவல். சம்பவ இடத்துக்கு டெல்லி தீயணைப்பு படையும் சென்றுள்ளது. இது தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளதாவது.

டெல்லியிலிருந்து வாராணசிக்கு இயக்க இருந்த இண்டிகோ விமானம் ‘6E2211’, டெல்லி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டலை பெற்றது. அதையடுத்து தேவையான அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டு, விமான நிலைய பாதுகாப்பு நிறுவனங்களின் வழிகாட்டுதல்களின்படி விமானம் மாற்று இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பிறகு மீண்டும் விமானம் டெர்மினலுக்கு கொண்டு வரப்படும். பயணிகள் அவசரகால கதவு வழியாக வெளியேற்றப்பட்டனர்.

விமானத்தின் கழிவறையில் ‘30 நிமிடங்களில் வெடிகுண்டு வெடிக்கும்’ என டிஷ்யூ பேப்பரில் எழுதப்பட்டு இருந்ததாக தகவல். அதையடுத்து வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டன. தொடர்ந்து சோதனை மேற்கொண்ட நிலையில் அது புரளி என தெரியவந்ததாக மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களாக அரசு அலுவலகங்கள், கல்விக் கூடங்கள், மருத்துவமனை, தங்கும் விடுதிகள் என பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வழியாக பெற்றுள்ளது. இருந்தும் அது போலியானதாக அமைந்துள்ளது. திங்கள்கிழமை (மே 27) அன்று மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல் மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடர்ந்து மேற்கொண்ட சோதனையில் அது வெறும் புரளி என தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

— ANI (@ANI) May 28, 2024

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.