மாஸ்கோ: தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து தலிபானை நீக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக அந்த நாட்டின் அரசு தரப்பு செய்தி நிறுவனமான ஆர்ஐஏ நோவோஸ்டி தெரிவித்துள்ளது. இதனை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது.
தலிபான்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது ரஷ்யா. அதன் மூலம் வர்த்தக ரீதியிலான உறவை மேம்படுத்த விரும்புகிறது. இத்தகைய சூழலில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டின் இறுதியில் கஜகஸ்தான் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து தலிபானை நீக்கி இருந்தது. அதே பாணியில் ரஷ்யாவும் அதை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2003-ல் தலிபானை தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தது ரஷ்யா.
கடந்த 1980-களில் சுமார் பத்து ஆண்டு காலம் வரை ஆப்கானிஸ்தானில் ரஷ்யா போரிட்டது. அதே போல தலிபானுக்கு ஆயுதங்களை வழங்குவது ரஷ்யா தான் என ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு இருந்த அமெரிக்க படை கடந்த 2018-ல் தெரிவித்திருந்தது. அப்போது அதனை ரஷ்யா மறுத்தது.
“கஜகஸ்தான் அண்மையில் அந்த முடிவை எடுத்தது. அது போல நாங்களும் அவர்களை தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்க உள்ளோம்” என லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதே நேரத்தில் கடந்த முறையைப் போல தங்கள் ஆட்சி இருக்காது என்று அப்போது தெரிவித்தனர். இருந்தும் தங்களது அறிவிப்புக்கு மாறாக அவர்களது செயல்பாடு இருந்து வருகிறது. அங்கு கடுமையான சட்டங்கள் மற்றும் தண்டனைகள் நிறைவேற்றப்படுகிறது.