மதுரை: “தமிழகத்தின் நீராதார உரிமைகளை காக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்பற்றவேண்டும். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் எடுத்த சட்ட நடவடிக்கையின் காரணமாகவே தமிழகத்தின் நீர் ஆதார உரிமைகள் காக்கப்பட்டன”,என்று அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.
முல்லைப் பெரியாறில் கேரள அரசின் புதிய அணை கட்டும் முயற்சியை கண்டித்து மதுரையில் விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது, காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கும் நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் புதிய அணை கட்டும் கேரள அரசின் விண்ணப்பத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரிக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய அரசின் தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிக்கு நீரைத் தேக்க அவசரகால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கேரள அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், மதுரையிலுள்ள வருமான வரி துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தபோவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் செவ்வாய்க்கிழமை காலை தமுக்கம் பகுதியில் திரண்டனர்.
அவர்கள் பிபி குளம் வருமான வரி துறை அலுவலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. காவல் துறையினர் உரிய அனுமதி அளிக்காததால் விவசாயிகள் வேறு வழியின்றி தமுக்கம் தலைமை தபால் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது, மத்திய – மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர், கேரள அரசின் செயல்பாட்டால் அதிர்ச்சி அடைந்த விவசாயி பஞ்சநாதன் உயிரிழந்தது போல நடித்துக் காட்டப்பட்டது. உயிரிழந்ததாக கருதப்பட்ட விவசாயி பஞ்சநாதனை சுற்றி மற்ற விவசாயிகள் மாரடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர், அத்துடன் கேரள அரசு வெளியிட்ட புதிய அணை கட்டும் அரசாணையை விவசாயிகள் தீயிட்டு எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிஆர்.பாண்டியன், “கேரள அரசு புதிய அணை கட்டும் திட்டத்துக்கான சுற்றுச்சூழல் விண்ணப்பத்தை பரிசீலிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆய்வுக்குழு ஒன்றை அமைத்துள்ளது. மத்திய அரசு கேரள அரசின் சுற்றுச்சூழல் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும். பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இணைந்து நீராதாரத் திட்டங்களை தாரை வார்க்க நடவடிக்கை எடுக்கிறார். முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணையில் அதிமுக ஆட்சியில் 142 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதற்கும் கீழாகவே நீர் தேக்கப்படுகிறது. கேரள அமைச்சர்கள் அவ்வப்போது அத்துமீறி அணை இருக்கும் பகுதிக்குள் நுழைந்து தண்ணீரை திறந்து விடுகிறார்கள்.
தமிழகத்தின் நீராதார உரிமைகளை காக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்பற்றவேண்டும். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் எடுத்த சட்ட நடவடிக்கையின் காரணமாகவே தமிழகத்தின் நீர் ஆதார உரிமைகள் காக்கப்பட்டன” என்று அவர் கூறினார்.