பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் மத்தியப் பிரதேசத்தில் ஆளுங்கட்சியின் பிரமுகர் உட்பட நான்கு பேர் மீது பாலியல் வன்கொடுமைப் புகாரளித்திருந்த 20 வயது பட்டியலின பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
முன்னதாக, கடந்த 2019-ல் பாஜக பிரமுகர் உட்பட நான்கு பேர் மீது சாகர் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சிறுமி (அப்போது 15 வயது) பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இதனால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் புகாரை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தத் தொடங்கினர். ஆனால், அவர்கள் தொடர்ந்து மறுத்துவந்தனர்.
இத்தகைய சூழலில், கடந்த ஆண்டு ஆகஸ்டில் பட்டியலின பெண்ணின் 18 வயது சகோதரனை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. பின்னர் அவரின் தாயாரும் நிர்வாணமாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தவே, ஒன்பது பேர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
இப்படியிருக்க, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரன் கொல்லப்பட்டதை நேரில் பார்த்த சாட்சியான அவரின் உறவினர் ராஜேந்திர அஹிர்வாருக்கு, கடந்த சனிக்கிழமை (மே 25) ஒருவர் போன் செய்து பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார். அதன்படி சென்றவ ராஜேந்திர அஹிர்வாரிடம், சாட்சி சொல்லக் கூடாது என்றும், சமரசமாக செல்ல வேண்டும் என்றும் ஒரு கும்பல் மிரட்டல் விடுத்திருக்கிறது. ஆனால், அவர் மறுக்கவே அங்கேயே கடுமையாகத் தாக்கப்பட்டார். பிறகு, மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுத்த போலீஸார் ஆஷிக் குரேஷி, பப்லு பெனா, இஸ்ரேல் பெனா, ஃபஹீம் கான், தந்து குரேஷி ஆகிய ஐவர் மீது கொலைவழக்கு பதிவுசெய்து, அவர்களில் ஒருவரை கைதுசெய்தனர். இந்த நிலையில், இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸில் வீட்டுக் கொண்டுவந்துக்கொண்டிருந்த பட்டியலின பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர், லோகேஷ் சின்ஹா, `பெண்ணின் உறவினர் உயிரிழந்த விவகாரத்தில் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறோம். இப்போது, இறந்தவரை ஏற்றிவந்த ஆம்புலன்ஸிலிருந்து பெண் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டார். விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளிவரும்’ என்று கூறியிருக்கிறார்.
இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க மீது கேள்வியெழுப்பியிருக்கும் காங்கிரஸ், `ஒரே வருடத்தில் இரண்டு கொலைகளும், பா.ஜ.க பிரமுகர் மீது பாலியல் வன்கொடுமை புகாரளித்த பெண்ணின் மர்மமான மரணமும் நிகழ்ந்திருக்கிறது. பிரதமர் மோடி அவர்களே இந்த செய்தி உங்களிடம் வந்ததா… உங்களின் ஜங்கிள் ராஜ்ஜியத்தில் சட்டம் வெளிப்படையாக மீறப்படுகிறது. இந்தியாவின் மகள்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்.
பின்னர் அவர்கள் சமரசமாக செல்லவில்லையென்றால் உங்கள் கட்சியினர் அவர்களைக் கொல்கிறார்கள். இந்தியாவின் மகள்களுக்கு நாட்டை பாதுகாப்பற்றதாக மாற்றிவிட்டீர்கள். எப்போதும் போல இந்த முறையும் நீங்கள் மிருகங்களுடன்தான் நிற்பீர்கள். இதை நாடு நன்கு அறிந்ததுதான்’ என விமர்சித்து, கடந்த ஆண்டு தன் சகோதரன் கொல்லப்பட்டபோது பட்டியலின பெண் கதறி அழும் வீடியோவை X சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது.
அதோடு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும், “மத்தியப் பிரதேசத்தில் தலித் சகோதரிக்கு நடந்த இந்த சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. மல்யுத்த வீராங்கனைகளாக இருந்தாலும் சரி, ஹத்ராஸ்-உன்னாவ் சம்பவம் மற்றும் இந்த கொடூர சம்பவம் என பாதிக்கப்பட்ட பெண்களாக இருந்தாலும் சரி குற்றம்சாட்டப்பட்டவர்களை மோடியும், அவரது அரசும் பாதுகாத்திருக்கிறது. சித்ரவதை செய்யப்பட்ட சகோதரிகள் நீதி கேட்டால், அவர்களின் குடும்பங்கள் அழிக்கப்படுகின்றன. நாட்டுப் பெண்கள் இனியும் அமைதியாக இருக்கப் போவதில்லை” என்று ட்வீட் செய்திருக்கிறார். இன்னொருபக்கம், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங், உயிரிழந்த பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb