போரூர் – சென்னை வர்த்தக மையம் இடையே மெட்ரோ ரயில் மேம்பாலப் பணிகள் தீவிரம்

சென்னை: போரூர் – சென்னை வர்த்தக மையம் இடையே மெட்ரோ ரயில் மேம்பாலப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், போரூர் சந்திப்பு – சென்னை வர்த்தக மையம் இடையே பல்வேறு இடங்களில் மேம்பாலப் பாதைக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடமும் (44.6 கி.மீ.) ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் 39 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும், 6 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும் இடம்பெற்றுள்ளன. மாதவரத்தில் இருந்து ரெட்டேரி சந்திப்பு, வில்லிவாக்கம், வளசரவாக்கம், போரூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், வானுவம்பேட்டை, மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, மேடவாக்கம் கூட்ரோடு, மேடவாக்கம் சந்திப்பு, பெரும்பாக்கம் வழியாக இந்த பாதை அமைகிறது.

இந்த வழித்தடத்தில் மேம்பாலப்பாதை (உயர்மட்டப்பாதை) பணிகள் பல்வேறு இடங்களில் தீவிரமடைந்து உள்ளன. தற்போது வரை 500-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. தூண்கள் அமைக்கப்பட்ட இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக, போரூர் சந்திப்பு – சென்னை வர்த்தக மையம் இடையே பல்வேறு இடங்களில் மேம்பாலப்பாதைக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ”சென்னை வர்த்தக மையம் – போரூர் சந்திப்பு இடையே முகலிவாக்கம், ராமாபுரம், மணப்பாக்கம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. பல்வேறு இடங்களில் தூண்கள் நிறுவி, அதற்கு மேல் கர்டர்கள் அமைத்து, உயர் மட்டப்பாதைக்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன.

போரூர் சந்திப்பு அருகே உயர்மட்டப்பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுதவிர, போரூர் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் வரும் 2026-ல் பணிகளை முடித்து, மெட்ரோ ரயில் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.