மட்டக்களப்பு மாவட்டதில் இடம்பெறும் 306 கிராமிய வீதி நிருமாண வேலைத்திட்டங்கள்  தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்  306 கிராமிய வீதி நிருமாணம் மற்றும் புனரமைப்பு வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று (28) மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மாவட்டப் அபிவிருத்திக் குழுத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் ஏற்பட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.

மாவட்டத்தில் இவ்வருடத்தில் 306 வீதி நிருமாணத் திட்டங்க 749பில்லியன் ரூபா செலவில்  இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன்படி முதல் கட்டத்தில் 52% வீதமான வேலைத் திட்டங்கள் கோரளைப்பற்று வடக்கு, தெற்கு மற்றும் மத்தி, ஏறாவூர் பற்று, மண்முனை வடக்கு, மண்முனைப்பற்று, போரதீவுப்பற்று போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணப்படும் கிராமிய மணல் வீதிகளைப் நிருமாணித்து கிறவல் மற்றும் கொங்கிறீட் வீதிகளாக செப்பனிடுவதுடன், இரண்டாம் கட்டத்தில் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வடிகாலமைப்பு, நிருமாணப் பணிகளை மேற்கொண்டு மக்களின் சௌகரியமான உபயோகத்திற்கு வழங்கப்படவுள்ளது.  

இதன் போது  பிரதேச ரீதியாக நியமிக்கப்பட்ட  வீதி நிருமாண ஒப்பந்த தாரர்களிடம் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து ஆராயப்பட்டதுடன், அவற்றுக்கான ஆலோசனைகள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனினால் வழங்கப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்:
மணல் வீதியற்ற கிராமங்களின் அவசியத்தை அறிந்து, இவ்வீதிகளை கிறவல் வீதிகளாக முன்னேற்றும் வேலைத்திட்டத்தை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தியதாகவும், இன்றைய பொருளாதாரச் சிக்கல் நிலை காணப்படினும் இவ்வீதி அபிவிருத்தி வேலைகள் இடம்பெறுகின்றமை சந்தோசமான விடயம் என்றும் தெரிவித்தார்.

குறித்த வீதி அபிவிருத்தி வேலைத் திட்டம் மும்மரமாக இடம்பெற்று, தற்போது நிறைவுக் கட்டத்தை எட்டியுள்ள அதேவேலை, எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள்; சகல வேலைத் திட்டங்களையும் நிறைவு செய்யுமாறு இதன் போது வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மாவட்ட செயலக உயரதிகாரிகளான பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதீஸ்குமார், பிரதம கணக்காளர் எம். எஸ் எம். பஸீர்,  பொறியியலாளர் ரீ.சுமன் மற்றும் பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலகங்களின் திட்டமிடல் பணிப்பாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், இவ்வேலைத் திட்டத்துடன் தொடர்புடைய சகல நிருமாண ஒப்பந்தகாரர்கள் எனப் பலரும்  கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.