`IIT-யில் படிப்பு… அமெரிக்காவில் வேலை' – மேட்ரிமோனியில் பெண்களை ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

சென்னையைச் சேர்ந்த பிரியன் என்பவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு இணை கமிஷனர் விஜயகுமாரைச் சந்தித்து புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், “நான் சென்னையில் பில்டராக உள்ளேன். என்னுடைய அக்காவுக்குத் திருமணமாகி பத்து வயதில் குழந்தை இருக்கிறது. ஆனால், அவரின் கணவர் இறந்துவிட்டதால் அவருக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்க முடிவுசெய்து, மாப்பிள்ளைப் பார்க்க திருமண தகவல் மையத்தில் பதிவுசெய்தேன். அந்த சமயத்தில் டாக்டர் பிரசாந்த் என்பவர், என்னிடம் போனில் பேசினார். `அமெரிக்காவில் ஆர்த்தோ டாக்டராக நான் வேலை செய்கிறேன். எனக்கும் திருமணமாகி என் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். அதனால் உங்களுடைய சகோதரியை நான் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். அவரின் குழந்தையையும் நன்றாகப் பார்த்துக் கொள்வேன்’ என்று அவர் கூறினார்.

திருமணம்

அதனால், நானும் என் அக்காவை அவருக்கு திருமணம் செய்துவைக்க முடிவுசெய்து அவரிடம் பேசிவந்தேன். அப்போது அவர், `விசா எடுக்க 14 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால், என்னிடம் 10 லட்சம் ரூபாய் மட்டுமே இருக்கிறது. 4 லட்சம் ரூபாய் நீங்கள் கொடுத்தால் விசா எடுத்துவிடுவேன்’ என்று என்னிடம் தெரிவித்தார். அதை நம்பி நானும், அவர் அனுப்பிய வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி வைத்தேன். அதன்பிறகுதான், நான் ஏமாற்றப்பட்டேன் என்பதை உணர்ந்தேன். எனவே, என்னை ஏமாற்றிய பிரசாந்த் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று புகார்தாரர் பிரியன் குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து, இந்தப் புகாரை விசாரிக்கும்படி அண்ணாநகர் சைபர் க்ரைம் போலீஸாருக்கு இணை கமிஷனர் விஜயகுமார் உத்தரவிட்டார். அதன்படி, இதில் வழக்கு பதிவுசெய்த அண்ணாநகர் சைபர் க்ரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்திதேவி, டாக்டர் பிரசாந்த் மற்றும் பணம் அனுப்பப்பட்ட வங்கிக் கணக்குகள் குறித்து விசாரணை மேற்கொண்டார். அப்போது, பிரியன் பணம் அனுப்பிய வங்கி கணக்கு ஒரு பெண்ணுடையது எனத் தெரியவந்தது. உடனடியாக அந்தப் பெண்ணிடம் சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்தபோது, அந்தப் பெண்ணையும் கார்த்திக் சந்திரன் என்ற பெயரில் ஒருவர் மேட்ரிமொனி மூலம் ஏமாற்றி வருவது தெரியவந்தது. கார்த்திக் சந்திரன் குறித்து அந்தப் பெண்ணிடம் போலீஸார் விசாரித்தபோது, அவர் தன்னை அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றுவதாக அறிமுகப்படுத்தியிருக்கிறார் என்பதும், மசாலா கம்பெனி ஆரம்பிக்க அந்தப் பெண்ணிடம் பணம் கேட்டு வாங்கியிருக்கிறார் என்பதும் தெரிந்தது. பின்னர் அடுத்தகட்டமாக, கார்த்திக் சந்திரனை தங்களின் விசாரணை வளையத்துக்குள் போலீஸார் கொண்டுவந்தனர்.

சித்திரிப்புக் காட்சி

அதையடுத்து, இன்ஸ்பெக்டர் சாந்திதேவி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் நிர்மல்ராஜ், பாலகிருஷ்ணன், கோமதி, தலைமைக் காவலர் குமரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படை, டாக்டர் பிரசாந்த், இன்ஜினீயர் கார்த்திக் சந்திரன் ஆகிய பெயர்களில் திருமண ஆசை காட்டி பெண்வீட்டாரிடம் பணத்தை பறித்தது யார் என்று விசாரிக்கத் தொடங்கியது. விசாரணையில் அவரின் உண்மையான பெயர் ஜார்ஜ் குமார் துரை (40) என்றும், அவர் தென்காசியில் பிளே ஸ்கூல் ஒன்றை நடத்தி வருகிறார் என்றும் தெரியவந்தது. பின்னர், அங்கு சென்ற போலீஸார் அவரைப் பிடித்து விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்தனர். விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், “ஜார்ஜ் குமார் துரை, சென்னை ஐஐடி-யில் படித்துவிட்டு தென்காசியில் பிளே ஸ்கூல் ஒன்றை நடத்தி வருகிறார். அமெரிக்காவிலும் சில ஆண்டுகள் வேலைபார்த்து வந்திருக்கிறார். மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவரும் இவர், இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து திருமண தகவல் மையத்தில் பதிவுசெய்தார். அப்போது அவர் தன்னுடைய போட்டோவைக் கொடுக்காமல் சமூக வலைதளத்திலிருந்து அழகானவர்களின் புகைப்படங்களைக் கொடுத்திருக்கிறார்.

ஜார்ஜ் குமார் துரை

மேலும் தன்னுடைய ஒரிஜினல் பெயரைப் பதிவு செய்யாமல் கார்த்திக் சந்திரன், டாக்டர் பிரசாந்த் என குறிப்பிட்டிருக்கிறார். அதைப் பார்த்து ஏராளமான பெண் வீட்டார், அமெரிக்கா மாப்பிள்ளை என ஆசைப்பட்டு ஜார்ஜ் குமார் துரையை தொடர்புகொண்டு திருமணம் குறித்து பேசியிருக்கிறார்கள். அவரும், விசாவுக்கு அவசரமாக பணம் வேண்டும், மசாலா கம்பெனி உள்ளிட்ட பிசினஸ் ஐடியாக்கள் என பலவற்றை பெண் வீட்டாரிடம் கூறி லட்சக்கணக்கில் பணத்தை வாங்கியிருக்கிறார். ஒரே டயலாக்கைச் சொல்லி இதுவரை மூன்று பெண்களிடமிருந்து சுமார் 15 லட்சம் ரூபாய் வரை ஜார்ஜ் குமார் துரை ஏமாற்றியிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம். விசாரணைக்குப் பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ளோம்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.