`இளமை என்பது ஒரு பெரும் பிழை; நடுத்தர வயது என்பது ஒரு போராட்டம்; முதுமை என்பது ஒரு துயரம்.’ – பெஞ்சமின் டிஸ்ரேலி (முன்னாள் பிரதமர், யுனைட்டெட் கிங்டம்).
`எதுக்கெல்லாம் கணக்கு பார்க்குறதுன்னு ஒரு விவஸ்தை வேண்டாமா?’ இப்படி யாரோ ஒருவர், யாரிடமோ சொல்வதை நாம் கேட்டிருப்போம். இன்றைய கார்ப்பரேட் காலத்தில் காசில்லாமல் ஒன்றும் நடக்காது, நிஜம்தான். நம் பாக்கெட்டில் மீந்திருக்கும் கடைசிக்காசு வரை உருவியெடுக்க பல திசைகளிலிருந்து நீளும் கைகள் அநேகம், உண்மைதான். இவற்றையெல்லாம் எதிர்கொண்டு, நமக்கே நமக்கென்று கொஞ்சமாவது சேர்த்துவைத்தால்தான் தப்பிப்போம், நிச்சயமாக. அதற்காக, நம் சுயநலத்துக்காக அன்பை பலி கொடுப்பது சரியா?
மருத்துவமனை. ஐசியூ-வில் அந்த முதியவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் உடல்நிலை மிகவும் சீர்கெட்டிருந்தது. ஐசியூ-வுக்கு வெளியே அவருடைய இரண்டு மகள்கள் அமர்ந்திருந்தார்கள். இருவருக்குமிடையே மௌனம் நிலவியது. சில நிமிடங்களுக்கு ஒரு முறை ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டாலும், இருவருமே பேசிக்கொள்ளவில்லை. மருத்துவர் வந்தார். மூத்த மகளைப் பார்த்துப் பேச ஆரம்பித்தார்.
“உங்க அப்பாவோட நிலைமை மோசமா இருக்கு. மூளையில சின்னதா ஒரு கட்டி… உடனே ஆபரேஷன் பண்ணியாகணும்.’’
“எவ்வளவு செலவாகும் டாக்டர்?’’
“ஆபரேஷனுக்கே நாலரை லட்ச ரூபா ஆகும். அதுக்கு மேல மெடிசின்ஸ், பெட், அது இதுன்னு மொத்தம் ஆறு லட்சம் ஆகும்.’’
மூத்த மகள், ஒரு முறை தன் தங்கையைக் கூர்ந்து பார்த்துவிட்டு, மருத்துவர் பக்கம் திரும்பினாள். “ஏன் டாக்டர் இந்த ஆபரேஷனை செஞ்சுட்டா, எங்க அப்பா பொழைச்சிடுவாரா?’’
“அதை உறுதியாச் சொல்ல முடியாது. வயசு எழுபதுக்கு மேல ஆகுதுல்ல..?’’
“அவரு பொழைக்கிறதுக்கான சான்ஸ் எவ்வளவு டாக்டர்?’’
மருத்துவர் யோசனையோடு அவளைப் பார்த்தார். “தர்ட்டி பர்சன்ட்… யோசிச்சுட்டு சீக்கிரம் சொல்லுங்க’’ என்று சொல்லிவிட்டு மருத்துவர் அங்கிருந்து நகர்ந்தார்.
மூத்தவளின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த இளையவள் கேட்டாள்… “இப்போ என்னக்கா செய்யலாம்?’’
“முதுமை என்பது ஒரு கப்பல் விபத்து.’’ – முன்னாள் பிரான்ஸ் பிரதமர், பிரெஞ்ச் ராணுவ அதிகாரி சார்ல்ஸ் டெ கால் (Charles de Gaulle)
மூத்தவள், தங்கையைப் பார்த்தாள். “என்ன செய்யலாம்னு நீ நினைக்கிறே… அதைச் சொல்லு முதல்ல.’’
“இதுல யோசிக்கறதுக்கு என்னக்கா இருக்கு. உடனே ஆபரேஷன் செஞ்சுடவேண்டியதுதான்.’’
“அவ்வளவு பணம் உன்கிட்ட இருக்கா?’’
தங்கை தலை குனிந்தபடி சொன்னாள். “என்கிட்ட இல்லைதான். ஆனா உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்குறது நம்ம அப்பாவாச்சே… அப்பிடியே விட்டுட முடியுமா… நீ பாதி பணம் குடு. நானும் பாதிப் பணத்தை எப்பிடியாவது புரட்டிடுறேன். அப்பாவுக்கு ஆபரேஷன் செஞ்சுடலாம்.’’
“உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு… டாக்டர் என்ன சொன்னாருன்னு கேட்டேல்ல… ஆபரேஷன் செஞ்சாலும் அப்பா பொழைக்கிறது நிச்சயமில்லை. அவருக்கு வயசும் எழுபதுக்கு மேல ஆகிடுச்சு. இந்த நிலைமையில நான் எப்பிடி மூணு லட்ச ரூபா குடுப்பேன்… எனக்கும் ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க.
அவங்களோட படிப்பு, எதிர்காலம்னு பார்த்துப் பார்த்து செலவழிக்கவேண்டியிருக்கு. அதுக்கெல்லாம் நானே என்ன செய்யறதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு இருக்கேன். இந்தா பாரு… நம்ம அப்பா உயிரோட இருக்கணும்னு கடவுள் விரும்பினாருன்னா, நிச்சயம் ஆபரேஷன் செய்யாமலேயே நல்லா இருப்பாரு. நம்ம அப்பா இனியும் உயிரோட இருக்க வேணாம்னு கடவுள் நினைச்சாருன்னா, இந்த உலகத்துலயே பெஸ்ட் ஹாஸ்பிட்டல்ல ஆபரேஷன் செஞ்சாலும் பொழைக்க மாட்டாரு. புரிஞ்சுக்கோ.’’
அவ்வளவுதான். தங்கை வெடித்து அழ ஆரம்பித்தாள். “என்னக்கா இப்பிடிப் பேசுற… ஐசியூ-வுல இருக்குறது நம்ம அப்பாக்கா…’’
மூத்தவள் பல்லைக் கடித்தபடி சொன்னாள்… “இப்ப எதுக்கு அழறே… முதல்ல அழறதை நிறுத்து… எல்லாரும் நம்மளையே பார்க்குறாங்க பாரு. அழுகையை நிறுத்துன்னு சொல்றேன்ல…’’ என்று அதட்டினாள். தங்கை, கர்ச்சீஃபால் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
மூத்தவள் பேச ஆரம்பித்தாள். “எனக்கு மட்டும் அப்பாமேல பாசம் இல்லைன்னா நினைக்கிறே… யதார்த்தத்தைப் புரிஞ்சுக்கோ. இத்தனை லட்சம் செலவு பண்ணினாலும், ஃபிஃப்டி பர்சன்ட்கூட சான்ஸ் இல்லைன்னா, அந்த ஆபரேஷனை எதுக்காகச் செய்யணும்… அப்பா திடீர்னு மயக்கமாயிட்டாருன்னு போன் பண்ணினே. நான்தானே இங்கே கொண்டு வந்து சேர்த்தேன்… இதுவரைக்கும் ஸ்கேன், பிளட் டெஸ்ட், எக்ஸ்ரேன்னு பதினஞ்சாயிரத்துக்கு மேல செலவாகியிருக்கு. நான்தானே செலவு பண்ணினேன்… அதுக்கே என் ஹஸ்பெண்ட்கிட்ட எப்பிடிக் கணக்கு சொல்றதுன்னு தெரியலை. அப்பாவுக்கு இந்த ஆபரேஷன் செய்யறது வேஸ்ட்டு. அவ்வளவுதான் சொல்லுவேன். அப்புறம் உன் இஷ்டம்.’’
மூத்தவள், குறுகுறுவென்று தங்கையையே பார்த்தாள். தங்கை திடமான குரலில் சொன்னாள்… “சரிக்கா. நான் பார்த்துக்கறேன்.’’
`மனிதநேயத்தின் மீது நாம் நம்பிக்கையை இழக்கவே கூடாது. ஏனென்றால், நாமெல்லாம் மனிதர்கள்.’ – ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
தங்கை, மருத்துவரின் அறையைத் தேடிப்போனாள். “டாக்டர், அப்பாவுக்கு ஆபரேஷன் செஞ்சுடலாம். எனக்கு ரெண்டு நாள் மட்டும் டைம் வேணும்.’’
“ஓகே மேடம். சீக்கிரம் பணத்தை ரெடி பண்ணுங்க.’’
தங்கை, ஐசியூவுக்குள் நுழைந்தாள். அப்பா, கண்களை மூடிப் படுத்திருந்தார். அவரின் தோளைத் தொட்டாள். அப்பா, மெல்லக் கண்களைத் திறந்தார். லேசாகச் சிரித்தார். “அக்கா எங்கேம்மா?’’ என்று கேட்டார்.
“அவளுக்கு ஏதோ அர்ஜென்ட் வேலையாம்ப்பா. கிளம்பிட்டா.’’
வீட்டுக்குத் திரும்பிய முதியவரின் இளைய மகள், தன்னுடைய நகைகளை விற்றாள். நண்பர்களிடமும் தெரிந்தவர்களிடமும் கடன் வாங்கினாள். தன் கணவரிடம், அலுவலகத்தில் அட்வான்ஸாக ஏதாவது தொகை கிடைக்குமா என்று கேட்கச் சொன்னாள். அப்படி இப்படியென்று இரண்டு நாள்களில் மொத்தப் பணத்தையும் புரட்டிவிட்டாள். அந்தப் பெரியவருக்கு ஆபரேஷன் நடந்தது. ஐசியூவிலிருந்து ஜெனரல் வார்டுக்கு மாற்றிய பிறகு, நான்கே நாள்களில் அவர் இறந்துபோனார்.
இறுதிச்சடங்கெல்லாம் முடிந்த பிறகு அக்கா, தங்கையிடம் தனிமையில் பேசினாள். “நான் அப்பவே சொன்னேனே… கேட்டியா… இப்போ பாரு, எவ்வளவு செலவு… ஆனாலும் அப்பாவைக் காப்பாத்த முடிஞ்சுதா… இந்த ஆபரேஷன் பண்ணினதுல உனக்கு என்ன கிடைச்சுது?’’
“பணம் போகட்டும்க்கா. ஜெனரல் வார்டுல இருந்த கடைசி நாள்ல அப்பா என்ன செஞ்சாரு தெரியுமா… என் கையை எடுத்து அவரோட உள்ளங்கையில பொத்தி வெச்சுக்கிட்டாரு. `என் செல்ல மகளே… நான் இந்த நிலைமையில இருந்தும், கடைசிவரைக்கும் என்னைவிட்டுப் போகாம கூடவே இருந்தியே… அது போதும்டா. இதை நான் மறக்கவே மாட்டேன்’னு சொன்னாரு. நான் கலங்கிப்போயிட்டேன்க்கா. அந்த வார்த்தை போதும். அதைவிடவா பணம் பெருசு?’’
மூத்தவள், பதில் சொல்ல முடியாமல் தங்கையையே பார்த்துக்கொண்டிருந்தாள்.