பீகார் மாநிலம் பாடலிபுத்ரா மக்களவைத் தொகுதியில் இரு தினங்களுக்கு முன்னர் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு கேட்டு பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ‘பீகார் மாநிலம், சமூகநீதிக்கு புதிய திசைவழியைக் கொடுத்த மண். அப்படி மண்ணிலிருந்து ஒன்றை அறிவிக்க விரும்புகிறேன். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி சமூகங்களின் உரிமைகளைப் பறித்து, முஸ்லிம்களுக்கு கொடுப்பதற்கான இந்தியா கூட்டணியின் முயற்சியை நான் முறியடிப்பேன்’ என்றார் மோடி.
மேலும், ‘அவர்கள் (இந்தியா கூட்டணி) அடிமைகளாக இருந்து கொண்டு தங்களது வாக்கு வங்கிக்காக அழகிகள் போல் முஜ்ரா நடனம் ஆடுகின்றனர். பாடலிபுத்திரா தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ராம் கிருபால் யாதவின் பெயரில் ராம் இருப்பதால், அதைக் கேட்டு முகம் சுளிக்கும் அளவுக்கு ராமரை எதிர்க்கட்சிகள் வெறுக்கின்றன. பிரதமர் நாற்காலிக்கு இந்தியா கூட்டணி மியூசிக்கல் சேர் விளையாடுகிறது’ என்றார் மோடி.
‘மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில், ‘காங்கிரஸின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் அறிக்கையைப் போல இருக்கிறது’ என்று முதன் முதலாக மதத்தைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினார். அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதன் பிறகு, ‘அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்பவர்கள்’, ‘ஊடுருவல்காரர்கள்’ என்றெல்லாம் பிரதமர் மோடி பேசினார்.
‘பிரதமரின் இத்தகைய மதவெறுப்பு பேச்சுகள் சமூகத்தில் சமூகத்தில் அமைதியின்மையை உருவாக்கும், மக்கள் மத்தியில் பிளவை உண்டாக்கும்’ என்று விமர்சித்த எதிர்க்கட்சிகள், பிரதமரின் பேச்சு தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானவை என்று புகாரும் அளித்தனர்.
மேலும், ‘பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், தேர்தல் ஆணையம் இதுவரை எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியதுடன் தனது கடமையை தேர்தல் ஆணையம் முடித்துக்கொண்டது.
இந்த நிலையில்தான், பீகாரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ‘வாக்கு வங்கிக்காக இந்தியா கூட்டணியினர் முஜ்ரா நடனம் ஆடுகிறார்கள்’ என்று பேசினார். மோடியின் இந்தப் பேச்சு எதிர்க்கட்சித் தலைவர்களை ஆத்திரமூட்டியிருக்கிறது.
‘பரத நாட்டியம் ஆடுகிறார்கள்’, ‘கதக்களி ஆடுகிறார்கள்’ என்றெல்லாம் குறிப்பிடாமல், ‘முஜ்ரா நடனம் ஆடுகிறார்கள்’ என்று மோடி ஏன் குறிப்பிட்டார் என்பதிலும் ஓர் அரசியல் இருக்கிறது. முஜ்ரா நடனம் என்பது முகலாயர் ஆட்சிக்காலத்தில் உருவானது. முகலாய சாம்ராஜ்ஜியத்தின்போது, ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான உயர் வகுப்பினர் இரவு நேரத்தில் ஒன்றுகூடி பொழுதைக் கழிப்பது வழக்கம். அந்த நேரத்தில், அவர்கள் முன்பு சிற்றின்ப நடன மங்கைகள் நாட்டியம் ஆடுவார்கள். அதுதான் முஜ்ரா நடனம் என்று சொல்லப்படுகிறது.
தற்போதைய நவீன காலத்திலும் முஜ்ரா நடனம் வழக்கத்தில் இருக்கிறது. மகாராஷ்டிராவின் மும்பை உள்ளிட்ட பகுதியில் கேளிக்கை நடன விடுதிகள் மிகவும் பிரபலம். அந்த விடுதிகளில் நடன மங்கைகள் ஆடும் நடத்துக்குத்தான் முஜ்ரா நடனம் என்று பெயர். 2005-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடன விடுதிகளுக்கு தடை விதிக்கப்பட்டபோது, முஜ்ரா நடனத்தை தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டனர். இப்போதும் மகாராஷ்டிரா, பீகார் உள்பட பல மாநிலங்களில் முஜ்ரா நடனம் குறிப்பிட்ட நடனக்கலைஞர்களால் ஆடப்பட்டுவருகிறது.
எனவேதான், பிரதமர் இந்தப் பேச்சு ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களை கோபமடையச் செய்திருக்கிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘முஜ்ரா நடனம் குறித்து பேசியதன் மூலம் பீகார் மாநிலத்தை பிரதமர் மோடி அவமதித்து விட்டார். ஏனெனில் முஜ்ரா நடனம் அதிகமாக பீகாரில்தான் ஆடப்படுகிறது. இதனால், பீகாரையும், பீகார் வாக்காளர்களையும் அவர் அவமதித்திருக்கிறார். அவரது எண்ணம் தவறானது. இந்த தேர்தல் பிரதமர் மோடிக்கும், மக்களுக்குமான தேர்தல்’ என்றார்.
பிரதமரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் ஒவைசி, ‘பிரதமர் பதவியில் இருப்பவர் பயன்படுத்தும் மொழியா இது? இப்படிப்பட்ட பேச்சுகளைப் பேசுவதற்கு எங்களிடம் ஆட்கள் இல்லை என்று மோடி நினைக்கிறாரா? 2000 சதுர கிலோ மீட்டர் இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்திருக்கிறது. இந்த விவகாரத்தில் மோடி அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி டிஸ்கோ டான்ஸ் ஆடுகிறாரா என்று கேட்க விரும்புகிறேன்’ என்றார்.
இதேபோல, பிரதமர் மோடியின் பேச்சை விமர்சித்திருக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள், ‘பிரதமர் பதவியின் கண்ணியத்தை மோடி காக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88