இந்தியன் பிரீமியர் லீக் பைனல் போட்டி கடந்த மே 26ம் தேதி நடைபெற்றது. இந்த இறுதி போட்டியில் கொல்கத்தா அணி 3வது முறையாக கோப்பையை வென்றது. இந்த சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடிய சன்ரைசஸ் அணி பைனல் போட்டியில் மோசமாக விளையாடி தோல்வியை சந்தித்தது. 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. ஆர்சிபிக்கு எதிரான முக்கியமான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்து வெளியேறியது. இந்த ஆண்டு சிஎஸ்கேவிற்கு ஒரு மோசமான ஆண்டாக இருந்தது. காரணம் அவர்களின் முக்கிய வீரர்கள் காயத்தால் அவதிபட்டனர்.
தொடரின் ஆரம்பத்திலேயே டெவான் கான்வே காயம் காரணமாக வெளியேறினார். அங்கிருந்து தொடங்கி சீசன் முழுவதும் பல வீரர்கள் காயம் அடைந்தனர். பத்திரனா முக்கியமான போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை. மேலும் தீபக் சாஹர் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். ரஹானேவும் ஒருசில போட்டிகளை தவறவிட்டார். இதனால் சென்னை அணி சரியான காம்பினேஷன் இல்லாமல் தடுமாறியது. இந்த தடுமாற்றம் காரணமாக 7 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் சிஎஸ்கே தக்கவைத்துக் கொள்ளக்கூடிய 4 வீரர்களை பற்றி பார்ப்போம். ஒருவேளை தோனி ஓய்வை அறிவித்தால் இந்த 4 பேரை சிஎஸ்கே தக்க வைத்து கொள்ளும்.
சிஎஸ்கே தக்கவைக்க போகும் வீரர்கள்
ருதுராஜ் கெய்க்வாட்: ஐபிஎல் 2025ல் சிஎஸ்கே தக்கவைக்க போகும் வீரர்களில் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலிடத்தில் இருப்பார். ஐபிஎல் 2024ல் ருதுராஜ் கெய்க்வாட் 14 இன்னிங்ஸ்களில் 583 ரன்களை அடித்து அசத்தி உள்ளார். 141.16 ஸ்ட்ரைக் ரேட்டில் சிறப்பாக விளையாடி சென்னை போன்ற மோசமான பிட்ச்களிலும் சராசரியாக 53 வைத்துள்ளார். மேலும் சென்னை அணியின் வருங்காலமாக ருதுராஜ் இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
ரவீந்திர ஜடேஜா: உலகின் சிறந்த ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவும் ஐபிஎல் 2025ல் சிஎஸ்கே அணியால் தக்க வைக்கப்பட வாய்ப்புள்ளது. ஜடேஜா ஐபிஎல் 2024ல் பேட்டிங்கில் பெரிதாக உதவவில்லை என்றாலும், சுழற்பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டார். ஐபிஎல் 2024ல் எட்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். தோனி ஐபிஎல் 2025ல் விளையாடாத பட்சத்தில் ஜடேஜாவின் தேவை அணிக்கு அதிகம் இருக்கும்.
மதீஷ பத்திரனா: வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனா அடுத்த ஆண்டு சிஎஸ்கே தக்கவைக்கக்கூடிய வெளிநாட்டு வீரர்களில் முதலாவதாக இருப்பார். ஐபிஎல் 2024ல் பத்திரனா தனி ஆளாக சில போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். மேலும் இந்த ஆண்டு அவரது பந்துவீச்சு கடந்த ஆண்டைவிட சிறப்பாக இருந்தது. இருப்பினும், ஐபிஎல் 2024 இறுதி கட்டத்தில் அவர் இல்லாதது சிஎஸ்கே அணிக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. ஐபிஎல் 2024ல் தக்க வைக்கப்படும் வீரர்களில் பத்திரன நிச்சயம் இருப்பார்.
சிவம் துபே: மற்றொரு ஆல்ரவுண்டரான சிவம் துபே சென்னை அணிக்கு வந்ததில் இருந்து சிறப்பான பேட்ஸ்மேனாக மாறி உள்ளார். கடந்த ஆண்டு சென்னை அணி வெற்றி பெறுவதற்கு இவரும் ஒரு காரணம். தனது சிக்ஸ் ஹிட்டிங் பவரால் தற்போது டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார் துபே. நிச்சயம் சென்னை அணியின் தக்க வைக்கப்படும் வீரர்கள் பட்டியலில் துபே இருப்பார்.