ஒரே ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வசிக்கும் 30 ஆயிரம் பேர்: எங்கே தெரியுமா?

பீஜிங்,

பொதுவாகவே, பெரிய பெரிய நகரங்களில் பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாகவே இருக்கும். அந்தவகையில், ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த கட்டிடம் சீனாவின் ஹாங்சோ என்ற இடத்தில் அமைந்துள்ளது. அந்த கட்டிடத்தின் பெயர், ‘தி ரிகென்ட் இண்டர் நேஷ்னல் அப்பார்ட்மெண்ட்’ ஆகும். புகழ்பெற்ற சிங்கப்பூர் சாண்ட்ஸ் ஹோட்டலின் வடிவமைப்பாளரான அலிசியா லூ என்பவர் தான் இந்த கட்டிடத்தை வடிவமைத்தார்.

இந்த பிரமாண்டமான கட்டிடம் முதலில் சொகுசு ஹோட்டல் கட்டுவதற்காகதான் கட்டப்பட்டது. பிறகு, அது அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றப்பட்டது. மேலும் இந்த கட்டிடம் எஸ் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2013 ல் திறக்கப்பட்ட இந்த ‘தி ரிகென்ட் இண்டர் நேஷ்னல் அப்பார்ட்மெண்ட்’ சுமார் 39 மாடிகளைக் கொண்டுள்ளது. இதன் உயரம் சராசரியாக, 206 மீட்டர் ஆகும். அப்போது, இந்த கட்டிடத்தில் 20 ஆயிரம் பேர் வாழ்ந்தனர். ஆனால், இப்போது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கட்டிடத்தில் வசிப்பவர்களின் எண்ணிக்கையானது 30 ஆயிரத்தை தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சின்ன அறைக்கான மாத வாடகை மாதம் 220 டாலர்கள் ஆகும். அதாவது, இந்திய மதிப்பில் ரூ.18 ஆயிரமும், பால்கனி வசதியுடன் கூடிய விசாலமான அறைகளுக்கு மாத வாடகை, 45 ஆயிரம் ஆகும். இங்கு குடியிருப்பவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த ஒரே கட்டிடத்தில் உள்ளது. இந்த கட்டிடத்திற்கு உள்ளேயே புட் கோர்ட், பொழுது போக்கு பூங்கா,நீச்சல் குளம், பார்லர், சூப்பர் மார்கெட், இன்டர்நெட் கபே என தேவையான அனைத்து வசதிகளும் இங்கே உள்ளது. இந்த கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 2.6 லட்சம் சதுர மீட்டர் ஆகும். இது சீனாவின் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றாகும். இந்த அடுக்குமாடி குடியிருப்பில், வணிகர்கள், சமூக ஊடகங்களில் செல்வாக்கு உள்ளவர்கள் மற்றும் பலதரப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.