புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் வரலாற்றில் இதுவரை இல்லாதவாறு 52.3 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் அதிகபட்ச வெப்ப நிலை பதிவாகியுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை மறுதினம் தொடங்கவுள்ள நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் கடுமையான வெப்ப அலை நிலவி வருகிறது. தலைநகர் டெல்லியில் வரலாற்றில் இதுவரை இல்லாதவாறு 52.3 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் அதிகபட்ச வெப்ப நிலை இன்று பதிவாகியுள்ளதாக இந்திய வானிலமை மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி முன்கேஸ்பூர் பகுதியில் இந்த அளவுக்கு கடுமையான வெப்ப நிலை நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று 49.9 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் டெல்லியில் வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இன்று நிலவிய இந்த கடுமையான வெப்ப நிலை காரணமாக டெல்லியில் மின் தேவையும் உச்சத்தை எட்டியுள்ளது. டெல்லியின் மின் தேவை இன்று மட்டும் 8300 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை தொட்டது. இத்தனை மெகாவாட் மின்தேவை டெல்லியில் இதுவரை இருந்ததில்லை. இதுவே முதல்முறை என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெப்பத்துக்கு மத்தியில் மழை: இதற்கிடையே, பிற்பகலுக்கு பிறகு டெல்லியில் லேசான மழைப்பொழிவும் இருந்தது. வெப்பத்தால் அவதிப்பட்ட மக்களுக்கு சற்று ஆசுவாசம் கொடுக்கும் வகையில் டெல்லி நகரின் முக்கிய பகுதிகளில் மழை பெய்தது.