தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 19 தொகுதிகளில் பா.ஜ.க நேரடியாக போட்டியிட்டது. இந்தமுறை எப்படியும் வாக்கு சதவீதத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக டெல்லியின் கவனிப்பு பலமாகவே இருந்தது. அதைப்பெற்றுக்கொண்ட நிர்வாகிகள் சிலர் முறையாக செலவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சென்னை, வேலூர், மதுரை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சர்ச்சை வெடித்தது. இந்தசூழலில்தான் நிர்வாகிகள் கூட்டம் நடத்துவதாக கடந்த மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார், அண்ணாமலை. அப்போது சீனியர் நிர்வாகிகள் பலரும், இந்த விவகாரம் கூட்டத்திலும் எதிரொலிக்கும் என எச்சரித்தனர். இதையடுத்து அண்ணாமலை ஆலோசனை கூட்டம் ரத்து செய்துவிட்டு, பிற மாநில தேர்தல் பிரசாரங்களில் கவனம் செலுத்தினார். பணம் விவகாரம் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்ததையடுத்து கடந்த 27.5.2024 அன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து கூட்டத்தில் என்னதான் நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்வதற்காக கமலாலய சீனியர்கள் சிலரிடம் பேசினோம், “சென்னை, அமைத்தக்கரை தனியார் மண்டபத்தில் பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம் காலை 10 மணிக்கெல்லாம் தொடங்கிவிட்டது. இதில் அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் பலரும் வந்து கலந்து கொண்டனர்.
இதையடுத்து நிர்வாகிகள் அனைவரும் பணம் விவகாரத்தை கிளப்ப முடிவு செய்திருந்தார்கள். இதை முன்கூட்டியே உணர்ந்திருந்த அண்ணாமலை பிரச்னைகள் குறித்து தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பேசிக்கொள்ளலாம். ஒவ்வொரு தொகுதியிலும் பிரத்தியேக கூட்டங்களை நடத்த திட்டம் வகுத்துள்ளேன்’ என சொல்லிவிட்டார். இதையடுத்து புகார் அளிக்க திட்டமிட்டிருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நமக்கு சாதகமாகவே இருக்கும். மூன்றாவது முறையாக பிரதமர் மோடிதான் ஆட்சிக்கு வருவார். குறிப்பாக தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி நமக்கு கிடைக்கும். ஜூன் 4-ம் தேதி நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கையின் போது சிறப்பாக பணியாற்ற வேண்டும். மற்ற பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு, இது சரியான நேரம் இல்லை. யார் எப்படி வேலை செய்தார்கள் என்பது எனக்கு தெரியும். நாடாளுமன்ற தொகுதி வாரியாக கூட்டம் நடத்துகிறேன். அப்போது உங்களது குறைகளை சொல்லுங்கள். பிறகு நான் நடவடிக்கை எடுக்கிறேன். இந்த நேரத்தில் நமது வேட்பாளர்கள் அனைவரையும் நான் பாராட்ட கடமைப்பட்டு இருக்கிறேன். ஏனெனில் எதிரிகளின் தாக்குதலை முதலில் எதிர்கொண்டவர்கள், அவர்கள்தான். வரும் 2026 தேர்தல்தான் நமது இலக்கு, அதை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.” என்றார்.
கூட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்திரராஜன், “பிரதமர் மோடி எப்போதும் போல தமிழ் மக்கள் மீதும், தமிழ் மீதும் அக்கறை கொண்டுள்ளார் என்பது தான் உண்மை. இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல், தி.மு.க பொய் பிரசாரம் செய்துவருகிறது. ஜூன் 4-ல் அதற்கான பதில் கிடைக்கும். மதவாதத்துக்கு எதிராக தீர்ப்பு வரும் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். மதவாதமே இங்கு இல்லை. மனிதவாதம் இருக்கிறது. பிரதமர் மோடியை எவ்வளவு திட்டினாலும், அவரின் திட்டங்கள் மக்களிடம் எப்படி சேர்ந்திருக்கிறது என்பதை எதிர்க்கட்சிகள் மறுக்க முடியாது.
பிரித்தாளும் அரசியல் தமிழகத்தில் ஸ்டாலின் போன்றோரால் தான் செய்யப்படுகிறது. தோல்வி பயத்தில் பாஜக இருப்பதை போல இந்தியா கூட்டணியினர் பொய் பிரசாரம் செய்கிறார்கள். சமீபத்தில் முடிந்த ஐந்து மாநில தேர்தலின்போதும் இதேபோன்ற பிரசாரத்தை கையாண்டார்கள். ஆனால், இறுதியில் பா.ஜ.கதான் வென்றது. தற்போதும் அதேபோல் ஒரு சூழ்நிலை தான் வரப்போகிறது. ஜூன் 4ல் மிக வலுவான ஒரு அரசை மத்தியிலும், வலுவான கட்சியாகவும் மிகப்பெரிய வெற்றியை பா.ஜ.க பெறும்.
பிரதமர் மோடி பேசுவது இங்கே திரித்து கூறப்படுகிறது. இடஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் தெளிவாக பேசுகிறார். எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி மக்களின் உரிமைகள் பறிக்கப்படக்கூடாது என்பதற்காகவே பிரதமர் மிகத்தெளிவாக பேசுகிறார். தென்சென்னை தொகுதியில் நிச்சயம் வெற்றிபெறுவேன். ஆளுநர் பதவியை விட்டுவந்த வருத்தம் இல்லை. தாய் வீட்டுக்கு திரும்பிய மகிழ்ச்சியே பா.ஜ.கவில் மீண்டும் இணைந்ததில் உள்ளது. நாங்கள் கவலைப்படக்கூடிய அளவுக்கு தமிழக மக்கள் எங்களை வைத்திருக்க மாட்டார்கள். துணிச்சலாக ஆளுநர் பதவியை விட்டுவருகிறேன் என்றால், பா.ஜ.கவினரால் மட்டும் தான் இத்தகைய துணிவை காட்ட முடியும்.
நிச்சயமாக ஜெயலலிதா இந்து மதம் மீது மிக ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த ஒரு இந்துத்துவா தலைவர் தான். இன்று சிலர் இதை எதிர்க்கலாம். கோயில்களில் குடமுழுக்கு நடத்துவதாக இருக்கட்டும், கர சேவகர்களுக்கு பாராட்டு தெரிவித்தது, கர சேவகர்களை காரணம் காட்டி பா.ஜ.க ஆட்சி கலைக்கப்பட்ட போது இது தவறு என்று மிக துணிச்சலாக குரல் எழுப்பியது, ராமர் கோயில் தேவை என்று தனது தொண்டர்களிடம் கையெழுத்து வாங்கியவர் ஜெயலலிதா.
ராமர் கோயில் கட்டுவதுக்கு ஆதரவு தெரிவித்த இந்து மதம் குறித்து அழுத்தமான நம்பிக்கை கொண்டிருந்த இந்துத்துவா தலைவர் அவர். ராமர் சேது விவகாரத்தில் அதற்கு ஆதரவு தெரிவித்தார். ஜெயலலிதா ஒரு இந்துத்துவா தலைவர் என்பதற்கு எவ்வளவோ உதாரணங்களை எங்களால் முன்னிறுத்த முடியும். ஜெயலலிதா இன்று உயிருடன் இருந்திருந்தால் ராமர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து, ராமர் கோயில் எங்கள் கனவு என்று கூறியிருப்பார். பா.ஜ.க அவரை குறுகிய வட்டத்தில் அடைக்கவில்லை. அவரை பெரிய வட்டத்தில் வைத்துள்ளது. ஜெயலலிதாவை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல விரும்புகிறோம்.
அவரை எதிர்ப்பவர்கள் தான் ஜெயலலிதாவை குறுகிய வட்டத்தில் வைக்க முயற்சி செய்கிறார்கள். இந்துத்துவா என்பதை ஒரு மத ரீதியாக பார்க்கிறார்கள். நாங்கள் இந்துத்துவா என்பதை ஒரு வாழ்க்கை முறையாக பார்க்கிறோம். அதனை தான் ஜெயலலிதா கடைபிடித்தார். ஜெயலலிதா நல்ல நேரம் பார்த்து தான் அதிமுக வேட்பாளர்களை வேட்புமனுத் தாக்கல் செய்ய வைப்பார். இந்துத்துவா குறித்து புரிதல் இல்லாத அதிமுக-வினர் தான் நாங்கள் கூறியதை எதிர்க்கின்றனர்” என்றார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பிரதமர் கனவில் உள்ளனர். இந்த கனவு வருகிற ஜூன் 4-ம் தேதி காலை 11 மணி வரை மட்டுமே இருக்கும். மூன்றாவது முறையாக இன்னும் அதிகமான தொகுதிகளை பெற்று பா.ஜ.க ஆட்சி அமைப்பது உறுதி. மூன்றாவது முறையாக பா.ஜ.க ஆட்சிக்கு வரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். பா.ஜ.க மீது எந்தவித குறையும் இல்லை. எனவே வெற்றியைக் கொண்டாட தயாராகுங்கள். இந்த முறை தென்னிந்தியாவில் மட்டுமே புதிய துவக்கமாக அதிகமான தொகுதிகளை வெல்வோம். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு வடக்கு, தெற்கு என்ற பேச்சே இருக்காது. தெலங்கானாவில் பா.ஜ.க 10 இடங்களில் வெல்வது உறுதி. ஜூன் 4ம் தேதி பா.ஜ.க அனைத்து பகுதிகளிலும் வெற்றிபெறுவதை பார்ப்பீர்கள்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி இரட்டை இலக்கம் என்ற இலக்கை வைத்து உள்ளோம். நிறைய இடங்களில் கடும் போட்டி நடந்து உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரிய தலைவர்கள் களத்தில் நின்று உள்ளார்கள். பெங்களூரு மத்திய தொகுதியில் நின்று டெபாசிட் இழந்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ் என்பது தான் அவரின் அரசியல் அனுபவம். நடிகராக பிரகாஷ்ராஜ் நல்ல நடிகர், நிறைய கதாபாத்திரம் செய்து உள்ளார். ஆனால் அரசியலில் அவரின் அனுபவம் அவ்வளவுதான். மோடியை திட்டுவது மட்டுமே முழு நேர வேலையாக பிரகாஷ்ராஜ் செய்து கொண்டு இருக்கிறார்.
எனக்கு ஒரு விஷயம் புரியல. அண்ணன் திருமாவளவன் எல்லாம் ஒரு கட்சியின் தலைவராக இருப்பவர். எம்.பி.யாக இருப்பவர். அவர் இந்த மாதிரி பேசுவதை தவிர்க்க வேண்டும். அதாவது, நமது நாட்டை பொறுத்தவரை, மோடி எதிர்ப்பு என்பது ஒரு எல்லைக்கு மேலேயே சென்றுவிட்டது. மோடியை மிக மோசமான விமர்சித்து வருகிறார்கள். இதை மோடியே பல இடங்களில் சொல்லி இருக்கிறார். எனவே இந்த விஷயத்தை பா.ஜ.கவும், மோடியும் கருத்துரிமை என்ற ரீதியிலேயே பார்க்கிறோம்.
அதனால் அண்ணன் திருமாவளவன் பொறுப்புடன் பேச வேண்டும் என்பது எனது வேண்டுகோள். இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி இருக்கும் வரை, பிரதமராக நரேந்திர மோடி இருக்கும் வரை, மாற்றுக் கருத்தை பேசும் நண்பர்கள் அது யாராக இருந்தாலும் சரி, எந்த ஆபத்தும் ஏற்படாது என்பதை நான் சொல்லிக் கொள்கிறேன். முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் நடப்பது போல இரவு 2 மணிக்கு வீட்டுக்கு போய் கைது செய்ய மாட்டோம்; 3 மணிக்கு தூக்கிட்டு போய் ஜெலிலில் போட மாட்டோம். கருத்துரிமையை நசுக்குகின்ற தி.மு.கவோடு கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், கருத்துரிமை பற்றி பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
நான் மாட்டை சாமியாக பார்ப்பவன், மாட்டை வைத்துதான் பிழைப்பு நடத்துகிறேன். மாட்டுக்கறி சாப்பிடுபவர்களிடம் சென்று நான் சாப்பிடாதே என்று நான் சொல்லமாட்டேன். எங்கள் அலுவலகத்திற்கு யார் வந்தாலும் நாங்கள் வரவேற்கிறோம். நல்லா சாப்பிட்டுவிட்டு போங்க. மகாத்மா காந்தி அவர்கள் மாட்டிறைச்சி குறித்து என்ன எழுதி உள்ளார் என்பதை ஈவிகேஎஸ்.இளங்கோவன் அவர்கள் படிக்கணும்.. மகாத்மா காந்தி சிந்தனையில் இருந்து எந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சி மாறி உள்ளது என்பதற்கு ஈவிகேஸ் இளங்கோவனே சாட்சி.
ஜெயலலிதா அவர்கள் ஒரு தீவிரமான இந்துத்துவாவாதி. இந்துத்துவா என்பது மதம் சார்ந்தது கிடையாது; அது ஒரு வாழ்வியல் முறை. என் இந்துத்துவா அனைவரையும் அரவணைப்பதுதான். கரசேவையை ஆதரித்து ஜெயலலிதா பேசினார். ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதற்காக அதிமுக தொண்டர்களிடம் ஜெயலலிதா கையெழுத்து இயக்கம் நடத்தினார்.” என்றார்.
தொடர்ந்து சீமான் குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “விஜயலட்சுமி அக்கா பேசும்போதெல்லாம் சம்பந்தமே இல்லாமல் அவர் என் மீது அட்டாக் செய்வார். அவர் விஜயலட்சுமி அக்காவுக்கு பதில் சொல்ல வேண்டும். சீமான் அண்ணனை தர்ம சங்கடத்தில் விட விரும்பவில்லை. தமிழ்நாட்டில் சீமான் அவர்களின் குரல் முக்கியமான குரல், அந்த குரல் இருக்க வேண்டும். தேவையில்லாத போட்டிக்கு ஏன் சீமான் வருகிறார் என்று எனக்கு தெரியவில்லை” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88