தேர்தல் முடிவு வெளிவரும் நாளன்று மனநிலை எப்படி இருக்கும்? – பிரதமர் மோடி பகிர்ந்த ருசிகர தகவல்

டெல்லி,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, இதுவரை 6 கட்டங்களாக 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. எஞ்சிய 57 தொகுதிகளுக்கு இறுதிகட்டமான 7ம் கட்ட தேர்தல் வரும் 1ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் பா.ஜ.க. கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி முக்கிய கட்சிகளாக உள்ளன. 3வது முறையாக வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.க. தீவிரம் காட்டி வரும் நிலையில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறது.

தேர்தல் முடிவுகள் 4ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் முடிவு வெளிவரும் நாளில் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ஏபிபி தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் தேர்தல் முடிவு வெளியாகும் நாளன்று உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.

அந்த கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் நான் மிகவும் கவனமாக இருப்பேன். தேர்தலில் கிடைக்கும் தொகுதிகள் எவ்வளவு என்ற விவரத்தில் இருந்து நான் தள்ளியே இருப்பேன். தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளன்று நான் தியானம் செய்வதை அதிகரிப்பேன். பிற வேலைகளையும் அதிகரிப்பேன். வாக்கு எண்ணிக்கை நாளன்று எனது அறைக்குள் நான் யாரையும் அனுமதிக்கமாட்டேன். என்னை தொலைபேசியில் தொடர்புகொள்ளவும் யாரையும் அனுமதிக்கமாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.