நவீன் பட்நாயக் உடல்நிலை மோசமடைந்தது குறித்து விசாரிக்க ஜூன் 10-க்குப் பிறகு சிறப்புக் குழு: பிரதமர் மோடி தகவல்

பாலாசோர்(ஒடிசா): ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை மோசமடைந்தது குறித்து விசாரிக்க ஜூன் 10-க்குப் பிறகு சிறப்புக் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஒடிசாவின் பாலாசோரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, “பாலாசோர் என்பது ஏவுகணை நகரம். கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் ஏவுகணை சக்தி மிகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. நாம் நமது பிரமோஸ் ஏவுகணையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். அதேபோல், சந்திராயன் நிலவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. அதுவும், வேறு யாரும் செல்லாத நிலவின் தென் துருவத்தில்.

10 ஆண்டுகளுக்கு முன்பு, மோசடிகளை நிறுத்துவது சாத்தியமில்லை என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்தி வருகிறோம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியாது என்று தோன்றியது. ஆனால், பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து நாட்டை விடுவித்துள்ளோம். ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவும் என்று யாரும் நினைக்கவில்லை. சட்டப்பிரிவு 370 எனும் சுவரை இடித்தோம். தற்போது அங்கு சாதனை அளவாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

லட்சக்கணக்கான ராம பக்தர்கள் மற்றும் கரசேவகர்கள், அயோத்தியில் கோயில் கட்டும் நம்பிக்கையை இழந்தனர். ஆனால், இன்று 500 வருட காத்திருப்பு முடிந்துவிட்டது. நமது குழந்தை ராமர், கூடாரத்தை விட்டு வெளியே வந்து ஒரு பெரிய கோவிலில் வீற்றிருக்கிறார். இவையெல்லாம் ஒரு டிரெய்லர். வரவிருக்கும் ஐந்து ஆண்டுகளில் நாடு புதிய வளர்ச்சி மற்றும் நம்பிக்கையை காணப் போகிறது. ஒவ்வொரு துறையிலும் நாம் தன்னிறைவு பெற இருக்கிறோம். இந்தியாவின் எழுச்சியை உலகம் காணப்போகிறது.

கடந்த ஒரு வருடமாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அவரால் எந்த ஒரு வேலையையும் சுயமாக செய்ய முடியாது என அவரோடு பணியாற்றுபவர்கள் கூறுகிறார்கள். இதற்குப் பின்னால் சதி இருக்குமோ என்றும் அவர்கள் சந்தேகிக்கிறார்கள்.

ஒடிசாவில் பாஜக வெற்றி பெற்றதும், ஒடிசாவைச் சேர்ந்த ஒருவரை நாங்கள் மாநிலத்தின் முதல்வராக்குவோம். அடுத்ததாக, நவீன் பட்நாயக்கின் உடல்நிலை குறித்து விசாரணை மேற்கொள்ள ஜூன் 10-க்குப் பிறகு ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழுவின் அறிக்கை பொதுமக்கள் முன்னிலையில் வெளியிடப்படும்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.