நீதிமன்றங்களின் விடுமுறை குறித்து விமர்சனம்: தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் கடும் கண்டனம்

சென்னை: இந்திய நீதிமன்றங்களின் விடுமுறை தினங்கள் குறித்து விமர்சித்த பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யாலுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவரான பி.எஸ்.அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய நீதித்துறையில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை, குளிர்கால விடுமுறை, தசரா விடுமுறை என தொடர் விடுமுறைகள் விடப்படுவது அபத்தமானது என்றும், வழக்குகளின் தேக்கம் அதிகரித்துள்ள நிலையில் இது தேவையற்றது என்றும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரான சஞ்சீவ் சன்யால் கருத்து தெரிவித்துள்ளார். இது நீதித்துறை பற்றிய சரியான புரிதல் அவருக்கு இல்லை என்பதை அப்பட்டமாக காட்டுகிறது.

உச்ச நீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரை நீதிபதிகளாக பதவி வகிப்பவர்கள் தொடர்ச்சியாக பல மணி நேரம் பணியாற்றும் சூழலில் உள்ளனர். வழக்குகளின் தேக்கத்தை குறைக்க வேண்டுமென்பதற்காக நீதிமன்ற நேரத்துக்குப் பிறகும் நீதிமன்றங்களில் இருந்தும், தங்களின் வீடுகளில் இருந்தும் இரவு, பகல் பாராது பணியாற்றுகின்றனர். இது நீதிமன்ற நடைமுறைகளைப்பற்றி அறிந்துள்ளவர்களுக்கு தெரியும்.

குறிப்பாக வார இறுதி நாட்களையும், விடுமுறை தினங்களையும் நீதிபதிகள் தீர்ப்புகளை எழுதுவதற்காகவும், திருத்தங்களை மேற்கொள்வதற்காகவும் மட்டுமே அதிகப்படியாக செலவிடுகின்றனர் என்பது பலருக்கும் தெரியாது. 37 ஆண்டுகளுக்கு முன்பாக, 127-வது சட்ட ஆணையம் பரிந்துரை செய்தும் நீதித்துறை செலவினங்கள் இன்னும் திட்டமிடப்படாத செலவினங்களின் பட்டியலிலேயே உள்ளது என்பது பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினரான சஞ்சீவ் சன்யாலுக்கும் நன்றாகத் தெரியும். நாட்டில் உள்ள 10 லட்சம் மக்கள் தொகைக்கு 50 நீதிபதிகள் பதவியில் இருக்க வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்ற வேண்டும் என 1987-ம் ஆண்டு சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் மக்களவையில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 21 நீதிபதிகள் என்ற விகிதாச்சாரமே உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மடங்குக்கும் அதிகமான வேலைப்பளுவை நீதிபதிகள் எதிர்கொண்டு வருகின்றனர்.

நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நீதிபதிகளைப் பற்றியும், நீதித்துறை பற்றியும் பேச அதிகார அமைப்புக்கு எவ்வித தார்மீக உரிமையோ அல்லது சட்ட ரீதியிலான உரிமையோ இல்லை என்பதை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் திட்டவட்டமாக தெரிவித்து, நீதித்துறை விடுமுறை பற்றிய சஞ்சீவ் சன்யாலின் கருத்துக்கு தனது கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறது.

இந்தியாவில் 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சஞ்சீவ் சன்யால் கவலைப்பட்டுள்ள நிலையில், அதில் 73 சதவீத வழக்குகள் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டவை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே பொறுப்பற்ற முறையில் நீதித்துறையைப் பற்றி விமர்சித்துள்ள சஞ்சீவ் சன்யாலின் கருத்துக்கள் கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி அவதூறானது’ என்று அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.