அரசியலாமைப்பின் ஒழுங்குவிதிகளின் படி ஜனாதிபதித் தேர்தலை நடாத்தவுள்ளதாகவும், அதற்காக இவ்வருடத்தில் பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவதற்கான அவசியமொன்றில்லை என்றும் வெகுசன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதற்காக வரவுசெலவுத் திட்டத்தில் பத்து பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இந்த வருடத்தில் பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவது அவசியமில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (28) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாளர்களுடனான சந்திப்பின் போதே செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்படி அரசியலமைப்பு சட்டப் பிரகாரம் இவ்வருடத்தின் ஒக்டோபர் மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலொன்றை நடாத்துவது அவசியமென்றும், அதற்காக தேவையான நிதி ஒதுக்கீடு பத்து பில்லியன் ரூபா வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணையாளரினால் அரசியலமைப்புப் பொறுப்பின் படி தீர்மானிக்கப்படும் காலப்பகுதியினுள் ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.