பெங்களூரு: பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனுவை, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
முன்னதாக, பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு முன்ஜாமின் கோரி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் அருண் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து, பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு வந்ததும் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெர்மனியில் இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் மே 31-ம் தேதி பெங்களூர வர உள்ளதாகவும், தன் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு உட்படுத்திக்கொள்ள இருப்பதாகவும் கூறி இருந்தார். தனக்கு எதிராக சதி நடந்திருப்பதாகவும், ஏற்கனவே திட்டமிட்டபடியே தான் தனது வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டதாகவும் அவர் கூறி இருந்தார்.
ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து பெங்களூரு திரும்புவதற்கான விமான டிக்கெட்டை பிரஜ்வல் முன்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மே 30 அன்று முனிச்சிலிருந்து புறப்பட்டு, மே 31-ம் தேதி அவர் பெங்களூரு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பிரஜ்வல் தரையிறங்கியவுடன் சிறப்பு விசாரணைக் குழு அவரை கைது செய்ய வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், பிரஜ்வாலின் தாய் பவானி ரேவண்ணா, தனது கணவர் மீதான கடத்தல் வழக்கில் தானும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் தாக்கல் செய்தார். அவருக்கு முன்ஜாமீன் வழங்க ஆட்சேபனை தெரிவித்துள்ள சிறப்பு விசாரணைக் குழு, இந்த வழக்கில் ஹெச்.டி. ரேவண்ணாவுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, பவானி ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு மீதான உத்தரவு மே 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.